இலங்கையில் மகேந்திர ராஜபக்சே ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு, மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி ஆன பிறகு, அங்கு ஜனாதிபதியின் செயல் அதிகாரம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்கே உயரிய அதிகாரம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல் முறையாக எதிர்வரும் ஆகஸ்ட் 17 அன்று இலங்கையில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிசார்பில் பிரதமர் பதவிக்கு மீண்டும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுகிறார். இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா முன்னணியின் சார்பில் பிரதமர் பதவிக்கு மகேந்திர ராஜபக்சே முன்னிறுத்தப்பட்டுள்ளார். அவர், பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டு போட்டியிடுவது அவரது கட்சிக்குள்ளேயே முரண்பாட்டையும் மோதலையும் ஏற்படுத்தியுள்ளது.

எனினும் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் பிரச்சாரத்தில், பிரதானப் பிரச்சனையாக இலங்கை தமிழ் மக்களின் சுயாட்சி அதிகாரம் மற்றும் அதிகாரப்பகிர்வு என்பதே முன்னுக்கு வந்துள்ளது. கூட்டாட்சி முறையில் உரிய தீர்வை எட்டுவோம் என்று ரணில் விக்ரம சிங்கேயும், இப்படி கூறுவதால் எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனியாக பிரிந்து தனி நாடாகிவிடும் ‘ஆபத்து’ உள்ளது என்று ராஜபக்சேயும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த இருவருமே தமிழ் மக்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்கும் நோக்கத்துடன் இல்லை என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.
பொதுத் தேர்தலையொட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், ‘நாட்டின் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலான அதி உச்ச அதிகாரப்பகிர்வே தீர்வாக அமையும்’ என்று குறிப்பிட் டுள்ளது. அத்துடன் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இந்தத் தீர்வு அமையவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. புவியியல் ரீதியாக பிணைக்கப்பட்டதும் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்டதுமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களதும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களதும் பூர்வீக வாழ்விடங்களாகும் எனக் குறிப்பிட்டுள்ள கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் புவியியல் உரிமை மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சாசனம், பொருளாதார சமூக சாசனம் ஆகியவற்றின் படி தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான மக்கள் என்பதுடன் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாகவும் இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இப்படிப்பட்ட பொருத்தமான தீர்வினை வழங்குவதற்கான அதிகாரத்தை இலங்கையின் இரண்டு பிரதான ஆளுங்கட்சிகளே கையில் வைத்திருக்கின்றன. இரண்டுமே சமஷ்டி அல்லது ஐக்கிய இலங்கை என்ற பதத்தை விடுத்து ஒற்றை ஆட்சிக்குள் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்படும் என்றே கூறிவருகின்றன. இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கை களிலும் இதுவேகூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நடைபெறவுள்ளதேர்தலில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காகவலுவான நிர்ப்பந்தத்தை அளிக்கும் வகையில் தமிழ் கட்சிகள் பிரச்சாரம் செய்வதும் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பெறுவதும் அவசியமாகி இருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: