திருத்தணி, ஆக. 3-

திருவள்ளூர் மாவட்ட வனத்துறை அலுவலர் முகமது ஷவாப் உத்தரவின் பேரில் திருத்தணி வனச்சரகர் வாசு தலைமையில் அதிகாரிகள் பெரியண்ணன், பாண்டுரங்கன், பாரதி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ஞாயிற்றுக்கிழமை மாலை திருத்தணி அருகே உள்ள சின்ன கடம்பூர் மோட்டூர் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பாலூத்து கிராமத்தைச் சேர்ந்த தர்மர் (45) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் புதருக்குள் செம்மரக் கட்டைகளை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தர்மரை கைது செய்து அவரிடம் இருந்த சுமார் 100 கிலோ செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை திங்கட்கிழமை திருத்தணி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.