நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர திங்களன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியடைந்துவிட்டது. நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்வது எதிர்க்கட்சிகள் தான் என்று பாஜக தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால் பாஜக நினைத்தால் ஒரே நொடியில் இந்த முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவந்து நாடாளுமன்றத்தை சுமூகமாக இயங்க வைக்க முடியும். ஐபிஎல் ஊழல் பேர்வழி லலித் மோடிக்கு உதவிய மத்திய அயல்துறை அலுவல் அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, வியாபம் ஊழலில் சிக்கியுள்ள மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரை ராஜினாமா செய்யுமாறு பாஜக தலைமை பணித்தால் நாடாளு மன்ற முடக்கம் முடிவுக்கு வந்துவிடும்.
ஆனால் இதை செய்வதற்கு பாஜக தயாராக இல்லை. மாறாக ஊழல் பேர்வழிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கி அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாடாளு மன்ற மாநிலங்களவையில் தாம் குற்றமற்றவர் என்று தமக்கு தாமே நற்சான்றிதழ் வழங்கிக் கொள்கிறார். சுஷ்மா சுவராஜ் மற்றும் வசுந்தரா ராஜே சிந்தியா செய்தது குற்றமே அல்ல என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

பாஜக தனது பிடிவாதத்தை தொடர்வதால் தான் திங்களன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஊழல் பிரச்சனை தொடர்பாக தாங்கள் விவாதத்திற்கு தயார் என்று ஆளுங்கட்சி தரப்பு கூறிவருகிறது. ஆனால் லலித் மோடிக்கும், சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே சிந்தியா வகையறாவுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட அரசு தயாராக இல்லை. வியாபம் ஊழல் விவகாரத்தில் கூட கடுமையான நிர்ப்பந்தம் ஏற்பட்ட பிறகே விசாரணைக்கு சிவராஜ் சிங் சவுகான் ஒப்புக் கொண்டார்.

ஆனால் ஊழலில் மையப்புள்ளியாக விளங்குகிற இவர் பதவியில் தொடர்கிற வரை விசாரணை பாரபட்சமின்றி நடைபெறாது. ஊழலில் சம்பந்தப்பட்டவரை பதவி விலகச் செய்து விசாரணை நடத்துவதற்கு பதிலாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் 25 பேரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தர விட்டுள்ளார். இது பிரச்சனையை தீவிரமாக்க உதவுமேயன்றி தீர்க்க உதவாது. மத்திய அமைச்சர் ஒருவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் உறுப்பினர்களின் ஊதியத்தை வெட்டும் திட்டம் இருப்பதாக கூறியுள்ளார்.

இத்தகைய மிரட்டல்கள் பலனளிக்காது. கடந்த காலத்தில் காங்கிரஸ் கூட்டணி அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்த போது நாடாளுமன்றத்தில் பாஜக இதே மாதிரியான அணுகு முறையைத்தான் பின்பற்றியது. நாடாளுமன்ற அமளியின் காரணமாக சில மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். ஆனால் தற்போது இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அல்ல, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைச்சர்கள் யாரும் ராஜினாமா செய்யமாட்டார்கள் என்று பாஜகவினர் கூசாமல் கூறுகின்றனர். உண்மையில் நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதில் பாஜகவினருக்கு விருப்பம் இல்லை. எப்படியாவது ரகளை நடக்கட்டும் கடைசி நேரத்தில் விரும்பும் மசோதாக்களை விவாதமின்றி நிறைவேற்றலாம் என்பதே பாஜகவின் எண்ணமாக உள்ளது. இதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: