திருவண்ணாமலை, ஆக 2-

ஊழல் மற்றும் முறைகேடுகளில் சிக்கியுள்ள பாஜக அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிபிஎம்-காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதிமுக-திமுக கட்சிகள் பெட்டி பாம்பாக அடங்கிது ஏன்?என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. நகரச் செயலாளர் இ.தங்கமணி தலைமை தாங்கினார்,  இல.அழகேசன் முன்னிலை வகித்தார். எஸ்.ராமதாஸ் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், அரசு மதுபானக் கடைகளை மூட முடியாது என ஆளும் கட்சியினர் தொலைக் காட்சியில் பேட்டியளித்து வருகின்றனர். தமிழக மக்களின் வாழ்வை பாதுகாக்க சசிபெருமாள் போன்றோர் மது விலக்கு கொள்ளைகளை அமலாக்க சொல்வதை ஆளும் கட்சியினர் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றார்.

அரசு மதுபானக் கடைகள் மூலம் நடப்பாண்டில் 29 ஆயிரம்கோடி ரூபாய் வருவாய் திரட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கண்களை இழந்து சித்திரத்தை வாங்கினால், அந்த சித்திரத்தை பார்க்க முடியுமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும. மாணவர்கள், உழைப்பாளிகள், ஏழை, எளிய மக்கள் உட்பட மதுக் கடைகளால் சமூகம் அழிந்து வருகிறது. இதை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்காது என்றும் அவர் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 லட்சம் மக்கள் தொகையில் 19 லட்சம் மக்கள் கிராமப்புற விவசாய கூலிகளாக உள்ளனர். 68 ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி இல்லை. அதற்கான முயற்சியும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஐபில் கிரிக்கெட்டை நடத்தியதில் ரூ. 1800 கோடி ஊழலில் ஈடுபட்ட லலித்மோடிக்கு உடந்தையாக இருந்த சுஷ்மா சுராஜ் உள்ளிட்ட பா.ஜ.க மத்திய அமைச்சர்களை ராஜினாமா செய்ய சிபிஎம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், பிரதமர் மோடி ஊழல் அமைச்சர்கள் ராஜினாமா செய்யமாட்டார்கள் என்று கூறிவருகிறார்.

ஊழல் வழக்கில் சிக்கிய மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும என்று எதிர் கட்சிகள் குரல் கொடுக்கும் நிலையில், மக்களவையில் இருக்கும் 37 அதிமுக எம்.பிக்கள், மாநிலங்களவையில் உள்ள திமுகவின் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்காமல், குற்ற உணர்வு காரணமாக பெட்டிப்பாம்பு போல் அடக்கியுள்ளனர். மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை எனவே, மார்க்சிஸ்ட் கட்சி ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம் என்றார்.

ஊழலை தடுக்க, ஒழிக்க, ஊழல் தடுப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக சட்டமன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்துவார்கள். ஆளும் அதிமுக ஊழலில் சிக்கியுள்ளது. திமுக தலைவர் குடுமபம் துவங்கி, மகள், மனைவி, பேரன் என பல தரப்பு மீதும் ஊழல் வழக்கு தொடர்வதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் தந்தை பெரியார், ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் தீண்டாமைக்கு எதிராக போராடினர். ஆனாலும் தீண்டாமை கொடுமை தொடர்கிறது. மதுரை உத்தபிரத்தில் தீண்டாமை சுவரை தகர்த்த பெருமை மார்க்சிஸ்ட் கட்சிக்கு உண்டு. திருவண்ணாமலையில் தலித் மக்களை இழிவு படுத்தும் விதமாக உள்ள தீண்டாமைசுவரை அகற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும இல்லை யென்றால், தீண்டாமை சுவரை மார்க்சிஸ்ட் கட்சியே தகர்க்கும் என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.

மாநிலக்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் பி.கண்ணன், பி.செல்வன், எம்.பிரகலநாதன், கே.குமரேசன், சோலைபழனி, வி.சுப்பிரமணி, கே.வாசுகி மற்றும் மாவட்டக்குழு, வட்டக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். எம்.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

முன்னதாக, கட்சி நிதியை மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனிடம் வழங்கினர்.

Leave A Reply

%d bloggers like this: