காஞ்சிபுரம், ஆக 2-

ராமேஸ்வரத்தை சேர்ந்த காசி மகன் மணி. இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கத்தில் தேனீர் கடையில் டீ மாஸ்டராக பணி புரிகின்றார். ஞாயிறன்று(ஆக.2) மணி காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் அருகில் அமைந்துள்ள 120 அடி உயர செல்போன் கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.

இந்த தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புப் பணியினர் விரைந்து வந்து மணியுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளாக கோபுரத்தை சுற்றி அரண் அமைத்தும் ஆம்புலன்ஸை தயார் நிலையிலும் வைத்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சமரச பேச்சு வார்த்தையின் முடிவில் கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்த மணி கீழே இறங்கி வந்தார்.

அப்போது அவர் கூறும்போது, தன்னை போன்ற இளைஞர்களை இந்த மது அடிமைப்படுத்தியுள்ளது என்றும் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரிக்கை விடுத்து சசி பெருமாள் போராடி உயிர் நீத்துள்ளார் என்றும் உடனடியாக பூரண மது விலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்காக செல்போன் டவரில் ஏறி போராட்டம் செய்தததாக தெரிவித்தார்.

Leave A Reply