புதுச்சேரி, ஆக. 2-

தேசிய மக்கள் தொகைப் பதிவேடுக்கான தகவல்கள் திரட்டும் பணி புதுச்சேரியில் தொடங்கப்பட்டது.இந்திய குடிமக்களுக்கான தேசிய பதிவேடு  உருவாக்கும் வகையில் நாட்டில் இயல்பாக குடியிருக்கும் அனைவரின் விவரங்கள் அடங்கிய தேசிய மக்கள் தொகை பதிவேட்டினை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இப்பதிவேடு மக்கள் தொகையில் தொகுப்பு விவரங்களின் 15 புலங்கள் மற்றும் உடற்கூறு அளவைகளான புகைப் படம், 10 விரல்களின் ரேகைகள், இருவிழிகளின் திரைப்படலங்களின் அச்சு என அனைவரின் விவரங்களையும் கொண்ட முழுமையான பதிவேடாக இருக்கும்.

இப்பதிவேடானது குடியுரிமை சட்டம் 1955 மற்றும் குடியுரிமை (குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய பதிவு அடையாள அட்டைகள் வழங்குதல்) விதிமுறைகள் 2003 ஆகியவற்றின் விதிகளுக்கு உட்பட்டதாகும்.

புதுவை முழுவதும் கடந்த 2011-ல் தேசிய மககள் தொகை பதிவேட்டுக்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அனைவரின் விவரங்கள் குறித்து அறிய வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவ்விவரங்கள் அனைத்தும் மின்னணுவடிவில் உள்ளன. அவற்றோடு ஆதார்அட்டை எண் விவரங்களையும் ஒருங்கிணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி புதுவையில் மொத்தம் 12.44 லட்சம் பேர் உள்ளனர். ஆதார் அட்டை விநியோகம் 95.80 சதவீதமாகும்.

இந்த யூனியன் பிரதேசத்தில் மொத்தம் புதுவையில் 9.41 லட்சம் பேர்(99.46 விழுக்காடு), காரைக்காலில் 1.76 லட்சம் பேர் (88.02 விழுக்காடு), ஏனாமில்3,8985 பேர் (77.09 விழுக்காடு), மாஹேயில் 35982 பேர் (84.37 விழுக்காடு) ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய சூழலுக்கு ஏற்ப தேசிய மக்கள் தொகைப் பதிவேடு உருவாக்கப்படுவதால், அனைவரின் ஆதார் எண்ணையும் அவற்றோடு இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டை, குடும்ப அட்டை விவரங்கள் இப்பணிகள் புதுவையில் வெள்ளிக்கிழமை தொடங்கி உள்ளது. இது குறித்து வருவாய்த் துறை செயலாளர் டாக்டர் வி.கந்தவேலு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இம் மாநிலத்தில் மொத்தம் 2,300 அரசு ஊழியர்கள் இந்த பணிகளில் ஈடுபடுவர். வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை இக்கணக்கெடுப்பு பணி நடைபெறும். ஒவ்வொரு வீடு வீடாக வரும் கணக்கெடுப்பாளரிடம் குடும்பத் தலைவர் ஒவ்வொரு தனிநபர், குடும்பம் மற்றும் அனைத்து விவரங்களையும், ஆதார் அட்டை எண், ரேஷன் அட்டை விவரங்களையும் அளிக்க வேண்டும். குற்ற நடவடிக்கை விவரங்களை சேகரிக்கவரும் கணக்கெடுப்பாளரிடம் முறையாக தகவல்களை தராமலும், ஒத்துழைக்காதவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, புதுவை யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் உண்மையான விவரங்களை தந்து ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.புதுவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சுந்தரவடிவேலு உடனிருந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.