பெரியபாளையம், ஆக. 2-

பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.
இதனால் ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர், ஆரணி, வெங்கல் உள்ளிட்ட காவல் நிலையங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருத்தணி காவல் நிலையத்தில் பணிபுரியும் கிருஷ்ணாங்குப்பத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் குமார்(41). சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். இரவு அவரது பணி முடிந்ததும் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் குமார் உள்ளிட்ட காவலர்கள் ஓய்வெடுத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கணேசனை சக காவலர்கள் எழுப்பிய போது சோர்ந்த நிலையில் காணப்பட்டார். இதையடுத்து உடனடியாக குமாரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் குமாரை பரிசோதனை செய்த போது, அவரது கால் பகுதியில் பாம்பு கடித்திருப்பது தெரிய வந்தது. உடனே அவரை மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குமார் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெரியபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன குமாருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும் இந்துமதி, நந்தினி என்ற இரண்டு மகள்களும், அரவிந்த் என்ற மகனும் உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.