புதுச்சேரி,ஆக 2-

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போலி ஆவணங்களை கொடுத்து பொறுப்புக்கு வந்துள்ள புதுச்சேரி பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுவை மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு, மாணவர்கள் பேரவை தேர்தல், மாணவர்களே நடத்தும் உணவகம் உள்ளிட்ட தங்களது 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 27-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் மாணவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. மேலும் 10க்கும் மேற்பட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். துணைவேந்தரின் தூண்டுதல் பேரில் காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், மாணவிகள் என்றும் பார்க்காமல் காவலர்கள் தரதரவென்று இழுத்துச் சென்று கைது செய்ததை கண்டித்தும், தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும்,மத்திய அரசு உடனடியாக பல்கலை கழக துணை வேந்தரை திரும்ப பெறக்கோரி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காமராஜர் சிலை எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து, முன்னால் செயலாளர் என்.பிரபுராஜ், வாலிபர் சங்கத்தின் செயலாளர் பி.சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் பங்கேற்று பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: