சென்னை, ஆக.2-

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 வது நீர் தேக்கம் திருவள்ளூரிலுள்ள தேர்வாய் கண்டிகையில் முழுவீச்சில் தயாராகி வருகிறது. வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக பணிகளை முடிக்க அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த நீர்தேக்கம் தேர்வாய் கண்டிகை, கண்ணன் கொட்டாய் முதலான 14 கி.மீ தொலைவு கொண்ட ஊத்துக்கோட்டை வரையிலான நீர்நிலைகளை இணைக்கும் படி அமையப் பெறுகிறது.

ரூ.330 கோடி செலவில் அரசு இத்திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தில் 5.45 கி.மீ தொலைவுக்கு முன்னதாக இத்திட்டத்தை செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. சுமார் 1,485 ஏக்கர் நிலம் இதற்காக கையகப்படுத்தப்பட்டது. சமீபத்தில் 54.59 ஏக்கரில் வனப்பகுதி நிலம் திசை மாற்ற மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டது. நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு  மற்றும் மீள் குடியேற்ற சட்டம் 2013ன் படி நில உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்படுகிறது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவ மழை வர இருக்கிறது. அதற்குள்ளாக நீர் தேக்கத்தினை முடிக்கும் பணியினை விரைவு படுத்தியுள்ளோம். இந்த புதிய நீர் தேக்கம், தாமரைகுப்பம், செஞ்சி, அகரம், பாலிகுப்பம் கிராமங்களின் வழியாக அமைகிறது.

மேலும் இது கண்டலேறு – பூண்டி கால்வாய்களை இணைக்கிறது. ஆந்திர அரசு கிருஷ்ணா நதி நீரை திறந்து விடும் நிலையில், இந்த நீர்தேக்கம் பயன்பெறும். வருடத்திற்கு இரு முறை இந்த நீர்தேக்கம் நிரம்பும். 1000 மில்லியன் கன அடி துண்ணீர் தேங்கி, ஒரு மாதத்திற்கான குடிநீர் தேவையை இது நிறைவு செய்யும் என்று அவர் கூறினார்.

பழவேற்காடு கடலோரத்தையொட்டி இந்த நீர்தேக்கம் அமைந்திருப்பதால் மிகுதியான மழைப் பொழிவு இங்கு இருக்கும். மெட்ரோ குடிநீருக்கு இது உண்மையில் வரமாகும். குடிநீர் நிலையங்கள் நீர் தேக்கத்தின் அருகில் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் அமையவிருக்கிறது. சென்னைக்கு நீர் விநியோகம் செய்ய இயலும் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு குறையும்.

Leave a Reply

You must be logged in to post a comment.