வேலூர், ஆக .2–

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின்போது கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள வீடுகளின் உரிமையாளரிடம் அபராதம் வசூல் செய்யப்படும் என வேலூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் வசந்த்திவாகர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. இதனை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.

இத்துடன் வீடு, வீடாக சென்று வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்கவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதே போல், வேலூர் மாநகராட்சியிலும் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் டெங்கு

காய்ச்சலை தடுக்க 180 களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து மாநகராட்சியின் நகர் நல அலுவலர் வசந்த்திவாகர் கூறியதாவது:–

வேலூர் மாநகராட்சி சார்பில்டெங்கு காய்ச்சலை தடுக்க 180 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடையாள அட்டையுடன் வீடு, வீடாக சென்று சோதனை செய்வார்கள்.அப்போது வீட்டுக்குள் உபயோகமற்ற பொருட்கள், கொசுக்கள் உற்பத்தியாகக் கூடிய பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்துவது, கொசுப் புழு உருவாவது எப்படி என்றும், அதனை அழிப்பது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்குவது, கழிவறை பகுதிகளில் மருந்து தெளித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.

இதுபோன்று களப்பணியாளர்கள் சென்ற வீட்டிற்கு மறுமுறை செல்லும் போது கொசு உற்பத்தியாக வாய்ப்புகள் இருந்தால் வீட்டின் உரிமையாளரிடம் ரூ.50 முதல் ரூ.500 வரை அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று வேலூர் மாநகராட்சியில் ரூ.40 ஆயிரம் வரைஅபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை தவிர்க்க பொது மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சுத்தம் இல்லாமல் இருக்கும் குடியிருப்புகளுக்கு தொடர்ந்து இதுபோன்று அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: