நாட்டின் அவமானங்களில் ஒன்று – சுதந்திரத்தை நிலைநாட்டி 68 ஆண்டுகளாகின்ற நிலையிலும் பள்ளிக் கல்வியில் கூட ஏற்றத்தாழ்வு தொடர்வது தான். அனைவருக்கும் சமமான கல்வி என்ற அடிப்படையான கொள்கை மத்திய அரசுக்கு இல்லாதது இதற்கு முக்கியக் காரணமாகும். அந்த அடிப்படையான கொள்கை மாற்றத்திற்காக நடந்துவந்துள்ள நீண்ட நெடும் போராட்டங்களின் ஒரு சிறு வெற்றியாகத்தான், முந்தைய ஆட்சியில் கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், பொதுப்பள்ளிகளை வலுப்படுத்துவதற்கு மாறாக, தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையிலேயே அந்தச் சட்டம் இருப்பது அப்போதே சுட்டிக்காட்டப்பட்டது.

தனியார் நிர்வாகங்கள் சட்டத்தை நேர்மையோடு செயல்படுத்தமாட்டார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டது. தற்போது ஒரு புதிய செய்தி அந்த எச்சரிக்கையை மேலும் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. பொருளாதாரத்திலும், சமூகநிலையிலும் பின்னுக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்பது சட்டத்தின் முக்கியமான விதி. ஆனால் 99 சதவீத பள்ளிகள் அவ்வாறு செயல்படவில்லை. தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்சிபிசிஆர்) ஆணைப்படி, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (டிஎன்சிபி சிஆர்) நடத்திய சோதனைகளில் இது தெரியவந்துள்ளது. அந்த 99 சதவீதப் பள்ளிகள், சட்டத்தைக் கொஞ்சமும் மதிக்கவில்லை என்பதைக் கண்டு சோதனைக் குழுக்களின் உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தார்கள் என்று அந்தச் செய்தி கூறுகிறது. சட்டப்படி செயல்படாதது மட்டுமல்ல,

பல நிர்வாகங்கள் இச்சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு முறைகேடுகளிலும் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளின் பொருளாதாரப் பின்னணியைக் குறைத்துக்காட்ட போலியான வருமானச் சான்றிதழ்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. மற்றொரு பெரும் முறைகேடாக, சட்டப்படி செயல்படுவதாகக் கணக்குக் காட்டி, அந்த 25 சதவீத இடங்களுக் கான நிதியை அரசாங்கத்திடமிருந்து தனியார் நிர்வாகங்கள் பெற்றுள்ளன. ஆணையத்தின் இடைக்கால அறிக்கை இனிமேல் தான் வெளியிடப்பட உள்ளது. அதில் மேலும் பல அதிர்ச்சிகள், முறை கேடுகள் அம்பலமாகலாம். கல்வி உரிமைக்காகச் செயல்படுவோர் ஏற்கெனவே, சில நிர்வாகங்கள், அரசாங்கத்திட மிருந்து நிதி வந்ததும் திருப்பிக் கொடுப்பதாகக் கூறி பெற்றோர்களிடமிருந்து வசூல் செய்திருக்கின்றன என்பதை அரசின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்.

பள்ளிக் கல்வித் துறை தலையிட்டதைத் தொடர்ந்து அந்த நிர்வாகங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்திருக்கின்றன. இதன் மூலம் முறைகேடுகளில் இறங்கியது உறுதியாகிறது என்றாலும், இந்த சிறைத்தண்டனைக்குரிய குற்றச்செயல் தொடர்பாக நிர்வாகத்தினர் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை. தாய் மொழி வழிக் கல்விக்கான விதி மீறப்படுவது உள்பட பல்வேறு முறைகேடுகளும் தங்குதடையின்றி தொடர்கின்றன. அரசுப்பள்ளிகளிலேயே ஆங்கில வழிவகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு காதில் போட்டுக் கொள்ளாததன் விளை வாகவே பெற்றோர் அந்த வகுப்புகளுக்காகத் தொடக்கத்திலேயே தனியார் பள்ளிகளை நாட வேண்டியதாகிறது என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். இப்போது, மாநில ஆணையமே அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கப் போகிற நடவடிக்கைகள் என்ன?

Leave a Reply

You must be logged in to post a comment.