சென்னை, ஆக.2-

சென்னை மெட்ரோ ரயிலுக்கான 2-வது வழித்தடத்தில், சென்ட்ரல் முதல் அண்ணாநகர் டவர் வரை சுரங்கப் பாதையில் 7 ரயில் நிலையங்களும், திருமங்கலத்திலிருந்து கோயம்பேடு வழியாக 9 ரயில் நிலையங்கள் மேல்மட்ட பாதையிலும் அமைக்கப்பட்டு வரு கின்றன.

முன்னதாக, முதல் வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, பூமிக்கு அடியில் சுரங்கப்பாதையில் 11 ரயில் நிலையங்களும், சின்னமலை முதல் சென்னை விமான நிலையம் வரை 5 ரயில் நிலையங்கள் மேல்மட்ட பாதையிலும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு  வழித்தடத் திலும் 32 ரயில் நிலையங்கள் அமைக் கப்பட்டு வருகின்றன.

மெட்ரோ ரயிலுக்கான மொத்த தூரம் 42 கிலோ மீட்டருக்கு பாதை அமைக்கப்படுகிறது. இதில் 24 கி.மீ. தூரம் பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 28-ந்தேதி சேத்துப்பட்டு அருகே நேரு பூங்கா வில் தொடங்கியது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள சுரங்கம் தோண்டும் 12 எந்திரங்கள் (டனல் போரிங் மிஷின்) மூலம் பணி முழுவேகத்தில் நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து கோயம்பேடு முதல் எழும்பூர் வரை 9 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப் பாதை பணி நிறைவடைந்தது. தற்போது தண்டவாளமும், சிக்னல்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாதையில் வரும் பிப்ரவரி மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் கூறியதாவது:-

கோயம்பேடு – ஆலந்தூர் மேல் மட்ட பாதையிலான சேவையை தொடர்ந்து விரைவில் கோயம்பேடு – எழும்பூர் இடையே சேவையை தொடங்குவதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

இந்தப்பாதையில் சுரங்கம் தோண்டும் பணி முற்றிலுமாக முடிவடைந்து விட்டது. தொடர்ந்து திருமங்கலம் – செனாய் நகர் இடையே தண்டவாளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தண்டவாளம் பணி முடிவடையும் பகுதிகளில் சிக்னல் களுக்கு தேவைப்படும் விளக்குகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இதற்கு தேவையான தண்டவாளங்கள், மின்சாதனங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

செல்போன் மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களுக்கு உதவும் வகையில் சிக்னல் கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற பிப்ரவரி மாதத்தில் இந்தப் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்படும்.

அதன் பிறகும் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் சோதனை ஓட்டம் நடைபெறும். இதையடுத்து 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ரயில் சேவை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

சென்னையில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அதிக போக்குவரத்து கொண்ட பாதைகளில் சுரங்கம் தோண்டும் பணி சவாலாக இருக்கிறது. குறிப்பாக, பூமிக்கடியில் ஒரு சில பகுதிகளில் களிமண்ணும், ஒரு சில பகுதிகளில் கடல் மண் போன்ற மிருதுவான மணலும் காணப்படுகிறது. இடையி டையே சிறிய பாறைகளும் தென்படுகின்றன. இவை அனைத்தையும் அப்புறப்படுத்தி திட்டமிட்ட காலத்தில் சுரங்கம் தோண்டும் பணியை முடிக்க தீவிரம் காட்டி வருகிறோம்.

இதற்கிடையில் மேதின பூங்கா – சைதாப்பேட்டை இடையே சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு ஒப்பந்ததாரர்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனால் அப்பகுதி பணியில் சற்று தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Leave A Reply

%d bloggers like this: