தருமபுரி, ஆக. 2

தருமபுரி அருகே பாளையத்தானூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நல்லம்பள்ளி ஒன்றியம் மாதேமங்கலம் ஊராட்சியில் உள்ள பாளையத்தானூர் கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக அருகே உள்ள ஏரியிலிருந்து போர்வெல் அமைத்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்காக சாலை ஓரம் குழி தோட்டப்பட்டது.

இதில் சாலையொட்டியே அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பைப் லைன் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால் கிராம மக்களுக்ககு குடிநீர் வழங்க முடியவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் மிட்டாரெட்டி அள்ளி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த காவல்துறையினர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு குடிநீர் பைப் லைன் அமைக்கும் பகுதி நில உரிமையாளர்களிடம் பேசி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: