வேலூர்,ஆக.2-–

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரில் வாணியம்பாடி செல்லும் சாலையில் தனியார் எரிவாயு உருளை வழங்கும் நிலையம் (கியாஸ் ஏஜென்சி) உள்ளது. இதில் அப் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்த நிலையத்தில், எரிவாயு உருளைக்காக பதிவு செய்து 3 மாதங்கள் கடந்த நிலையிலும் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த, பாதிக்கப்பட்ட மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர், சம்பந்தப்பட்ட தனியார் கியாஸ் ஏஜென்சியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகர காவல்நிலைய ஆய்வாளர் வெங்கடாச்சலம் பொது மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இது போன்று அப்பகுதி மக்கள் 5 முறை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply