சென்னை, ஆக 1-

6 வது ஊதியக் குழுவின் மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ள அனைத்துப் படிகளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் சனிக்கிழமையன்று (ஆக1) தொடர் முழக்க உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

2011 சட்டமன்றத் தேர்தல் காலத்தில், வாக்குறுதி அளித்ததற்கு ஏற்ப, தமிழக அரசு தன்பங்களிப்பு ஓய்வு ஊதியத்திட்டத்தை நீக்கம் செய்து பழைய ஓய்வு ஊதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். 1986 முதல் 1988 வரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களையும் 2004 முதல்2006 வரை தொகுப்பூதிய நியமனத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களையும் பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன் முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பள்ளிக் கல்வித்துறையில் பகுதி நேரப்பணி காலத்தில் பணிபுரிந்த தொழிற்கல்வி ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் 50 விழுக்காடு பணிக்காலத்தை ஓய்வு ஊதியத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். தாய்மொழி தமிழ்ப்பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணை எண். 266ஐ திருத்தம் செய்து தமிழ்ப்பாடத்தை முதல் பாடமாக வைக்கவேண்டும், உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் தனியாக ஒரு நலத்திட்ட அலுவலரை நியமிக்க வேண்டும், மேலும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வட்டார அளவில் ஒரு தனி அலுவலரை நியமிக்க வேண்டும், அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் நிலை-1 நியமிக்கவேண்டும், ஆசிரியர் தகுதித்தேர்வை நீக்கிட வேண்டும்.

ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் எவ்வித பதவி உயர்வும் இல்லாமல் 30 ஆண்டுகளாக பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு 6 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த தொடர் முழக்க உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐமாநில செயலாளர் ஆர்.முத்தரசன், ஸ்டாலின் (திமுக), திருமாவளவன் (விசி), ஞானசேகர் (பாமக), பலராமன்(காங்கிரஸ்), தமிழிசைசவுந்தரராசன்(பாஜக), மல்லைசத்தியா (மதிமுக), மோசஸ்(ஆரம்பபள்ளி), கயத்தாறு, பக்தவச்சலம், மாயவன், குலாம், கே.பி.ஓ.சுரேஷ், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: