சென்னை, ஆக. 1 –

மதுவிலக்குப் போராளி சசி பெருமாள் மரணத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் வலுக்கத் துவங்கியுள்ளது. தமிழகத்தில் பெரும் சமூகத் தீங்காக மாறியுள்ள மதுக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 4 அன்று தமிழகம் முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் சனிக்கிழமை கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உண்ணாமலைக்கடை எனும் கிராமத்தில், செயல்படும் டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டுமென கிராம மக்கள் போராடி வந்தனர். அந்தக் கடையை அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையும் ஆணை பிறப்பித்துள்ளது. மக்கள் போராட்டத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமலும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும், தமிழக அரசு தொடர்ந்து மதுக்கடையை நடந்தி வந்தது.

இதனைக் கண்டித்து, காந்தியவாதி சசிபெருமாள், 200 அடி உயர அலைபேசி கோபுரத்தின் உச்சிக்குச் சென்று தீப்பந்தம் ஏந்திப் போராடினார். ஐந்து மணி நேர போராட்டத்தின் முடிவில் அவர் மரணமடைந்தார். அவரின் மரணத்திற்கு அரசின் அலட்சியமே காரணமாகும்.

தமிழகத்தின் ஏழை எளியோர், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் வாழ்க்கையை பாதிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்து வருகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கினை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்டு மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் 13ம் தேதி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய ஆறு கட்சிகள் கூட்டாக முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், சசிபெருமாள் மரணத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆளும் கட்சி தவிர்த்த அனைத்துக் கட்சியினர் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாளில், தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கூட் டாக அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முழு ஆதரவைத் தெரிவிக்கிறோம். தமிழக மக்கள் இந்தப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.