கிருஷ்ணகிரி, ஆக. 1-

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காணிக்கைசாமி, சேகர் மற்றும் காவலர்கள் சின்னபர்கூர் சுடுகாடு ஓடை அருகே ரோந்து சென்றனர்.

அப்போது அவ்வழியே கள்ளத்தனமாக டிராக்டரில் மணல் ஏற்றி வந்த பர்கூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்த வேலு(46) என்பவரை கைது செய்து, மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இதேபோல் குருபரப்பள்ளி உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கக்கன்புரம் கூட் ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் திருச்சியிலிருந்து மணல் கள்ளத்தனமாக பெங்களூருக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 யூனிட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவரான கந்திகுப்பம் அருகே உள்ள பாலேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சசிகுமார் (24), மாற்று டிரைவரான பெங்களூரை சேர்ந்த அனுமந்தப்பா(27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். லாரி உரிமையாளரான ஓசூர் பந்தலப் பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜை  தேடி வருகின்றனர்.

மேலும் பேரிகை உதவி ஆய்வாளர் அறிவுசெல்வம் மற்றும் போலீசார் சூளகிரி – பேரிகை சாலை பீக்கனப்பள்ளி பிரிவு ரோட்டில் ரோந்து சென்றபோது அங்கு மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் திருச்சியிலிருந்து மணல் கள்ளத்தனமாக பெங்களூருக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 5 யூனிட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த அப்துல்மன்னன்(37) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: