விழுப்புரம், ஆக 1 –

மத்திய –  மாநில அரசுகளின் ஊழல்களை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் (வடக்கு) மாவட்டக்குழு ஆக.1 முதல் 14ந் தேதி வரை நடை பயணம் மேற்கொள்கிறது.

அரசுப் பள்ளிகளை கூடுதலாக திறக்க வேண்டும், விழுப்புரத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், ஏரி, குளம், கால்வாய்களை தூர்வாரி மராமத்து செய்திட வேண்டும், நூறு நாள் வேலையில் கூலிபாக்கியை வழங்குவதோடு சட்டக் கூலியான ரூ.187/- வழங்க வேண்டும், மனு கொடுத்த அனைவருக்கும் விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலை பாக்கித் தொகையை வழங்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் குழநீர், சாலை வசதி, மருத்துவ வசதி மேம்பாடு செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் பேர் பங்கேற்கும் 41 குழுக்கள் மாவட்டம் முழுவதும் செல்கின்றன.

அகரம் கிராமத்தில்  துவங்கிய நடை பயணத்தை  மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.சங்கரன் துவக்கி வைத்தார்.  இந்த நடைபயணம் முண்டியம்பாக்கத்தில் முடிவடைந்தது. இதில் மாவட்டச் செயலாளர் கே.கலியன், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வி.கிருஷ்ணராஜ்,  கிளை செயலாளர்கள் எஸ்.ரமேஷ், அய்யப்பன், நாகலிங்கம், ஆர்.எஸ்.மணி, அய்யப்பன், ஏ.தண்டபானி, சிவசங்கரன்,  சே.அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.