திருக்கோவிலூர், ஆக 1

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தமிழக பொதுப் பணித்துறை தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளை குவாரி அமைக்க உள்ளதை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று மாலை திருக்கோவிலூரில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருக்கோவிலூர் அருகே ஆவியூர் பகுதியில் மணல் குவாரி அமைப்பதை ரத்து செய்ய வேண்டும், தென்பெண்ணையாற்றில் வேறு எங்கும் இதை அமைக்கக் கூடாது, நிலத்தடி நீர்வளம், நிலவளத்தை பாதுகாத்திட வேண்டும், கரைகளில் குப்பை கொட்டுவது, ஆலைக்கழிவுகள், மருத்துவக்கழிவுகளை கொட்டுவதை தடுத்திட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் திருக்கோவிலூர் வட்டக்குழு சார்பில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

கட்சியின் வட்டச்செயலாளர் எஸ்.வேல்மாறன் தலைமை தாங்கினார். விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், நகரச் செயலாளர் கே.விஜயகுமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.முத்துவேல், ஆர்.தாண்டவராயன், எல்.பாக்கியம் கண்டன உரையாற்றினர்.

ஊராட்சி மன்றத் தலைவர்கள் வீரப்பாண்டி வி.உமாமகேஸ்வரி, தணிக்கலாம்பட்டு குட்டியம்மாள் குப்பன், வடமலையனூர் பி.உமாபாவாடை, கண்டாச்சிபுரம் துணைத்தலைவர் எம்.பாபு, கே.எம்.ஜெயராமன், ஜீவா, ஜே.ராஜா, வட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் இதில்பங்கேற்றனர். பின் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் சீனிவாசனிடம் மனு அளிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: