புதுச்சேரி, ஆக.1-

செப்டம்பர் 2  வேலை நிறுத்தம் மத்திய பாஜக ஆட்சிக்கு எச்சரிக்கை மணியாக அமையும் என்று பிஎஸ்என்எல்இயூ பொதுச் செயலாளர் பி.அபிமன்யு கூறினார். பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் புதுச்சேரி மாவட்ட இரண்டாவது மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் கே.சிவக்குமார் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.அபிமன்யு பேசியதாவது;

பாஜக அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், மக்கள் எல்லோரையும் அமர்த்திப் பார்த்துவிட்டனர். தற்போது இந்துக்களிடம் ஆட்சியை ஒப்படைத்துள்ளனர். இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று பகிரங்கமாகப் பேசினார். அதேபோல் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களை சேர்ந்த விஎச்பி தலைவர் அசோக்சிங்கால் பேசும் போது முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சியை கடந்து 800 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஆட்சி அதிகாரம் நம் கையில் வந்துள்ளது என்கிறார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு ஓர் ஆண்டு நிறைவு செய்துள்ளது. தேர்தல் காலத்தில் நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி கேரளாவுக்கும் சென்றார். அங்கு ஆதிதிராவிட மக்கள் மத்தியில் பேசும்போது, “பொருளாதார ரீதியாக நீங்கள் பின்தங்கியுள்ளீர்கள், நானும் பின்தங்கிய சமூகத்தில் இருந்துதான் வந்தவன், எனவே உங்கள் சிரமம் எனக்கு தெரியும் ’’ என்று பேசினார். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் செல்வந்தர் செலுத்தக்கூடிய  நலவரியை மட்டும் ரூ.2லட்சம் கோடியை கட்ட வேண்டாம் என்று சலுகை வழங்கி உத்தரவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இரண்டரை லட்சம் கோடி வரிசலுகையை வழங்கினார். இவர்தான் சமூகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களுக்கான பிரதிநிதியா?

ரயில்வே தனியார்மயம்

கடந்த 1995 ஆம் ஆண்டு மத்திய தொலைதொடர்பு துறையில் தனியாரை அனுமதிக்கும் முடிவை மத்திய ஆட்சியாளர்கள் எடுத்தனர். அப்போதே பிஎஸ்என்எல் ஊழியர்கள் இத்துறையை தனியார் மயமாக்க அரசு முயற்சி மேற்கொள்கிறது என்று குற்றஞ்சாட்டினர். அதற்கு மத்திய ஆட்சியாளர்கள் மறுத்தார்கள்.

ஆனால் இன்று பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் வெறும் 12 விழுக்காடு செல்போன் இணைப்புகள் மட்டுமே உள்ளது.  மற்ற இணைப்புகள் அனைத்தும் தனியாரிடம் உள்ளது. இதேபோல் ரயில்வேயையும் தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. அதுமட்டும் இல்லை இத்துறையில் அன்னிய முதலீட்டையும் அனுமதிக்கும் முடிவை மத்திய ஆட்சியாளர்கள் எடுத்துள்ளனர்.  எல்ஐசியில் 49 விழுக்காடு அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ளனர்.

மேலும் இதனை  74 விழுக்காடாக உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறார்கள். ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒரு விழுக்காடு பங்குகளைக் கூட விற்க முடியவில்லை. இதற்கு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடையே நிலவும் ஒற்றுமையும் போராட்டமும்தான் காரணம். செப்டெம்பர் வேலைநிறுத்தம் இந்தியாவில் 17 விழுக்காடு மக்கள்தான் நிரந்தர ஊதியம் பெறுபவர்கள். மற்ற 83 விழுக்காடு மக்கள் மாதம் 10 ஆயிரத்திற்கும் குறைந்த ஊதியம் பெறுபவர்கள். இவர்களுக்கு நிரந்தர வேலை என்பதும் இல்லை. ஒப்பந்த முறையில் பணியாற்றி வருபவர்கள்.

இன்றைக்கு மத்திய, மாநில அரசுத் துறைகளில் ஒப்பந்த முறையில்தான் பணிக்கு ஆட்கள் நிரப்பப்படுகிறது. அதுவும் எந்தவித பணிபாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை. பெரும்பான்மை தொழிலாளர்களாக உள்ள இந்துக்களுக்கு எதிரான  ஆட்சிதான் மத்தியமோடி ஆட்சி.  எனவேதான்  வருகின்ற செப்படம்பர் 2 ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் அறைகூவலின் படி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டத்தில் மத்திய பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பங்கேற்கிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படும் மோடி ஆட்சிக்கு இப்போராட்டம் எச்சரிக்கை மணியாக அமையும் என்றார். முன்னதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.மோகன்தாஸ் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் வேலை அறிக்கையை வாசித்தார். சிஐடியு பிரதேச உதவித் தலைவர் கே,முருகன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலர் சுப்பரமணியன், ஆர்.எம்.எஸ் பென்ஷனர்கள் சங்க செயலர் நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். இறுதியாக சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளர் சி.கே.நரசிம்மன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாநாட்டில்  பிஎஸ்என்எல் திரளான ஓய்வூதியர் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: