வழக்குகளை மெதுவாக நகர்த்திச்செல்லத் தீர்மானித்திருப்பதற்குக் காரணம் அரசியல் உயர் மட்டத்திலிருந்து வந்த உத்தரவுகளா அல்லது அரசாங்க அதிகார வர்க்கத்தின் உத்தரவுகளா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், 2011 க்கும் 2013 க்கும் இடையே மத்திய உள்துறை அமைச்சகத்தில் செயலாளராக இருந்த ஆர் கே சிங் (இவரது அதிகார வரம்புக்குள் தான் தேசியப் புலனாய்வு ஏஜென்சி செயல்பட்டுவந்தது) இப்போது பீகார், அர்ரா தொகுதியிலிருந்து பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

சென்ற ஆண்டு பிப்ரவரியில் ஒருநாள் காலைப் பொழுது. என்னுடைய செல் பேசியில் ஒரு மிஸ்டு கால் வந்திருந்ததைப் பார்த்தேன். 2007 ஆம் ஆண்டு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வெடி குண்டு தாக்குதல் வழக்கை விசாரித்து வரும்தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ)யைச் சேர்ந்த விசால் கார்க்கிடமிருந்து அந்த அழைப்பு வந்திருந்தது. அதைப் பார்த்ததுமே நான் அவரைத் தொடர்பு கொண்டேன். ஆயினும், எவரும் அதனை எடுத்திடவில்லை. அன்று மாலை,எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது: “ஹலோ லீனாஜி, இதனை அனுப்பியது, தேசிய புலனாய்வு ஏஜென்சியைச் சேர்ந்த விசால் கார்க்,’’ என்று அதில் இருந்தது.

கார்க் அந்த செய்தியில், கேரவன் ஏட்டில் வெளியாகியிருந்த, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வெடி குண்டுத் தாக்குதல் வழக்கில் முக்கியமாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருந்த நபரான ஸ்வாமி அசிமானந்தாவின் நேர்காணல் சம்பந்தப்பட்ட ஒலி நாடாக்களுடன் தன்னைச் சந்திக்க முடியுமா என்று கேட்டிருந்தார்.

ஆர்எஸ்எஸ் தலைவரின் ஆசிர்வாதம்தி கேரவன் இணைய தளத்தில் அப்போது தான் அவரது நேர்காணலின் சாராம்சங்கள் உயிர்த் துடிப்போடு ஓடிக்கொண்டிருந்தன. அதற்கு முந்தைய மாதம்தான் தி கேரவன் ஏட்டில் நான் அசிமானந்தாவைப் பேட்டி கண்ட விவரம் பிரசுரமாகி இருந்தது. இணையதளத்தில் ஓடிக் கொண்டிருந்த ஒலி நாடாக்களில் அவர், தான் சம்ஜவுதா எக்ஸ்பிரசில் பல அடுக்கு வெடி குண்டுத் தாக்குதல்லைகளை நடத்துவதற்கு முன்பாக, தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்திடமும், அதன் அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினரான வல்லமை மிகுந்த இந்த்ரேஷ் குமாரிடமும் ஆசிர்வாதங்கள் பெற்றது குறித்துக் கூறியவை ஓடிக் கொண்டிருந்தன. இது தொடர்பாகக் கேரவன் ஏட்டில் நான் எழுதும் சமயத்தில் கார்க்கையும் பேட்டி எடுத்திருந்தேன்.

விசால் கார்க் அனுப்பியிருந்த செய்தி குறித்து கேரவன் ஏட்டின் ஆசிரியர் குழு மற்றும் இதழின் வழக்குரைஞர்களிடம் கலந்தாலோசித்தேன். பின்னர் நாங்கள் வெளியிட்டுள்ள ஒலி நாடாக் களின் பிரதிகளைத் தங்களுக்கு அளிப்பதில் நாங்கள் மகிழ்வு கொள்கிறோம் என்று பதில் அனுப்பினேன். அது மட்டுமல்ல, தாங்கள் மேற் கொள்ளும் புலன் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்குவதாகவும் தெரிவித்து ஒரு பதிவுக் கடிதமும் அவருக்கு, தேசியப் புலனாய்வு ஏஜென்சி முகவரிக்கு அனுப்பிவைத்தோம். ஆயினும் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் எங்களுக்கு வரவும் இல்லை, அந்த ஒலி நாடாக்களை எவரும் வந்து எங்களிடமிருந்து பெற்றுச் செல்லவும் இல்லை. சம்ஜவுதா வெடி குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து 2007 ம் ஆண்டில் ஆஜ்மீர் மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற தொடர் வெடி குண்டுத் தாக்குதல்களும், 2006 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் மாலேகானில் நடைபெற்ற இரு வெடி குண்டுத் தாக்குதல்களுக்கு பின்னர், மக்கள் மத்தியில் “இந்து பயங்கரவாதம்’’ குறித்தும் பேசப்பட்டது. அதுநாள்வரை பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் என்றால் அது முஸ்லிம் பயங்கரவாதிகளிடமிருந்துதான் என்கிற கருத்திலிருந்து ஒரு முக்கியமான இடைமாற்றம் ஏற்பட்டது.

முஸ்லிம் பயங்கரவாதிகள் மட்டுமல்ல இந்து பயங்கரவாதிகளும் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. இந்து பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் குறித்து நான் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். 2012 இன் முற்பகுதியில் எழுதத் தொடங்கியபின்னர், இந்து பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்த அனைத்து வழக்குகளையும் தங்களுக்கு மாற்றிக்கொண்ட என்ஐஏ, அவ்வழக்கு களை ஆழமான முறையில் விசாரணை செய்வதில் அக்கறை காட்டவில்லை என்கிற முடிவிற்கு நான் வந்துவிட்டேன். என்ஐஏ உண்மையில் 2008ம் ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்டது.

“பயங்கரவாதம்’’ தொடர்பான வழக்குகளைப் புலனாய்வு செய்வதற்கென்றே நாட்டின் தலைசிறந்த காவல் துறை அதிகாரிகளைப் பொறுக்கி எடுத்து இதில் இணைத்துக் கொண்டார்கள். ஆனால், நடைமுறையில் “பயங்கரவாதம்’’ தொடர்பான வழக்குகளை மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ) மற்றும் மகாராஷ்ட்டிரா காவல் துறையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு மேற்கொண்ட அளவிற்குக் கூட , என்ஐஏ மேற்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. இந்த வழக்குகள் என்ஐஏவுக்கு மாற்றப்படுவதற்கு முன்னர், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் தான் அசிமானந்தாவைக் கைது செய்து, அவரிடமிருந்து நீதித்துறை நடுவர் முன் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று, முக்கியமான சாட்சிகளையும் சந்தேகத்திற்குரிய நபர்களையும் அடையாளம் காட்டியது. இவ்வெடிகுண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னே இருந்து செயல்பட்ட கேந்திரமான ஆர்எஸ் எஸ் உறுப்பினர்களின் பெயர்களையும் வெளிக்கொணர்ந்தது.

இவர்களில் மிகவும் முக்கிய நபர், இந்த்ரேஷ் குமார். இவரை சிபிஐ 2010ல் விசாரித்தது. ஆயி னும் இவ்வழக்குகளை சிபிஐ-இடமிருந்து என்ஐஏவுக்கு மாற்றப்பட்டபின்னர் (அப்போது இது ஐமுகூ அரசாங்கத்தின் கீழ் இயங்கி வந்த போதிலும்கூட), விசாரணைக்காக இந்த்ரேஷ் குமாரை அழைத்து விசாரிப்பதில் நியாயம் எதுவும் இருக்கிறதா என்பது நிச்சயமில்லை என்று ஊடகங்களுக்குக் கூறியது. ஐமுகூ அரசாங்கக் காலத்தில் இந்து பயங்கரவாதிகள் தொடர்புடைய வழக்குகள் அனைத்தும் தேசியப் புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டபின்னர், புலன் விசாரணையில் இருந்த வழக்குகளையும், குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளையும் மிகவும் மெது வாக நகர்த்திச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.

வழக்குகளை மெதுவாக நகர்த்திச் செல்லத் தீர்மானித்திருப்பதற்குக் காரணம் அரசியல் உயர் மட்டத்திலிருந்து வந்த உத்தரவுகளா அல்லது அரசாங்க அதிகார வர்க்கத்தின் உத்தரவுகளா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், 2011 க்கும் 2013 க்கும் இடையே மத்திய உள்துறை அமைச்சகத்தில் செயலாளராக இருந்த ஆர்கேசிங் (இவரது அதிகார வரம்புக்குள்தான் தேசியப் புலனாய்வு ஏஜென்சி செயல்பட்டு வந்தது) இப்போது பீகார், அர்ரா தொகுதியிலிருந்து பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் குறித்துக் கொள்வது நல்லது. பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், ஜூன் மாதத்தில் இவ்வழக்குகள் மீதான தலையீடுகள் தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன. சென்ற மாதத்தின் கடைசி வாரத்தில், 2008 மாலேகான் வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு அரசு வழக்குரைஞர், ரோகினி சாலியான், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஒரு என்ஐஏ அதிகாரி தன்னை அணுகி, வழக்கை நடத்துவதில் “மிகவும் மென்மையாகப் போங்கள்’’ என்று கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.

என்ஐஏ, ரோகினி சாலியான் குற்றச்சாட்டுக்களை மறுத்தது. ஆயினும் ஒருவாரத்திற்குள்ளேயே, 2008 மாலேகான் வெடிகுண்டு விபத்து நடந்த அதே நாளன்று, குஜராத்தில் மொடாசா என்னுமிடத் தில் அதே போன்று நடைபெற்ற வெடி குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கை என்ஐஏ முடித்துக்கொண்டதாக அறிக்கை தாக்கல் செய் திருக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது. குஜராத் காவல் துறையிடமிருந்து வழக்கை என்ஐஏ எடுத்துக் கொண்ட சமயத்தில், குஜராத் காவல் துறை இந்துத்வா கோணத்தில் வழக்கை சரியாக நடத்த வில்லை என விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. ரகசியக் கூட்டம்இந்து பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வெடி குண்டுத் தாக்குதல் மிகவும் கொடூரமான ஒன்று. 68 அப்பாவிகள் இதில் கொல்லப்பட்டார்கள்.

இவ்வழக்கு விசாரணைக்கும் இது தான் கதி. ஜூலை இரண்டாம் வாரத்தில் சண்டிகார், பஞ்ச்குலா நீதி மன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணையின்போது சாட்சியமளித்த பத்து சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறிவிட்டனர். இவ்வாறு மாறியவர்களில் பாரத் மோகன் ராடேஷ்வர் மற்றும் அவர் மனைவி கவிதா முக்கியமானவர்கள். இவர்களின் இல்லத்தில் நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில்தான் இத்தாக்குதலுக்கான சதித் திட்டம் தீட்டப்பட்டது. இந்து பயங்கரவாதிகள் மீதான வழக்குகள் அனைத்திற்கும் அநேகமாக இதே கதிதான். வழக்குகளின் கதி இது என்றால் சிறைகளில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? அநேகமாக மிகவும் வசதியாகத்தான் அவர்கள் சிறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 2013 டிசம்பரில் சாத்வி பிரக்யா தாகூரை நான் சந்தித்தேன். சக்கர நாற்காலியில் அமர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் அவரைப் பார்வையாளர்கள் வந்து தொடர்ந்து பார்த்த வண்ணம் இருந்தார்கள்.

அவரது குடும்பத்தினரும், அகில பாரதிய வித்யா பரிசத் ஊழியர்களும் எப்போதும் அவருடன் இருந்து, அவருக்குத் தேவையான பழங்கள் மற்றும் இளநீர் ஆகியவற்றை அவருக்குக் கொடுத்த வண்ணம் இருந்தார்கள்.அதேபோன்று 2014ன் முற்பகுதியில் ஸ்வாமி அசிமானந்தாவை நான் சந்தித்தபோது, அவருக்கு சிறையில் விஐபி-களுக்கான அறை ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். அவர் தன் உணவை சமைத்துக் கொடுப்பதற்காக, சொந்த சமையலரை ஏற்பாடு செய்திருந்தார். அவர் நீதிமன்றங்களுக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்படுகையில் அப்படியே அவர் விரும்பும் இடங்களுக்குச் சென்றுவரவும் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு ஒருதடவை செல்கையில் தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டிய, தன் சொந்த ஆஸ்ரமத்திற்கும் சென்று வந்துள்ளார். ஆஸ்ரமம் அமைந்துள்ள டாங்ஸ் தொகுதி முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினரான விஜய் பட்டேலையும் சந்தித்துள்ளார். அவர் இவருக்கு ஓர் அற்புதமான விருந்து வைத்துள்ளார்.

அங்கே இவர் அனைவரையும் சந்தித்துள்ளார். ஆயினும் தற்போது பாஜகவின் பழங்குடியினர் பிரிவு செயலாளராக இருக்கும் விஜய் பட்டேல், இதனை மறுத்துள்ளார்.சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கில் அசிமானந்தாவிற்கு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் சென்ற ஆகஸ்டில் பிணை வழங்கி இருக்கிறது. இவரது பிணைமனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, என்ஐஏ தரப்பில் ஆட்சேபணை எதுவும் எழுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் வேலையை நான் செய்வேன் அசிமானந்தாவுடன் நான் பேசிக் கொண்டிருந்த போது அவர், தனக்கு நரேந்திரமோடியை 1990 களிலிருந்தே தெரியும் என்றும், கடந்த காலங்களில் அவருடைய ஆதரவால் தான் பெரிதும் ஆதாயம் அடைந்ததாகவும் கூறினார். அப்போது அவர் குஜராத் முதல்வர் கிடையாது. டாங்ஸ் நகரில் கலவரங்கள் வெடிப்பதற்குக் காரணமாக இருந்த அசிமானந்தாவை பின்னர் அகமதாபாத்தில் ஆர்எஸ்எஸ் கூட்டம் ஒன்றில் மோடி சந்தித்த போது, மோடி அவரிடம், “ஸ்வாமிஜி, நீங்கள் செய்து கொண்டிருக்கும் காரியங்களைப் போல எவராலும் செய்ய முடியாது. உண்மையான வேலையை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் தான் அடுத்த முதல்வர் என்று இப்போது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நான் முதல்வராக வந்த பின் உங் கள் வேலையை நான் செய்வேன். மற்றவை மிகவும் எளிதாகிவிடும்,’’ என்று கூறியிருக்கிறார்.டாங்ஸ் நகரில் உள்ள அசிமானந்தா ஆஸ்ரமத்திற்கு 2002ல் நிதி வசூலிக்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்ற போதும் பின்னர் 2006ல் அசிமானந்தா சபரி தாம் அருகில் இந்தி பேசும் பகுதிகளிலிருந்து பழங்குடியினரை வரவழைத்து ஏற்பாடு செய்திருந்த திருவிழா ஒன்றிற்கும் மோடி வந்திருக்கிறார். அசிமானந்தா தீவிரவாதத் தாக்குதல்களுக்காக வழக்கில் பிணைக்கப் பட்டிருக்கும் அதே சமயத்தில், மோடி இந்நாட்டின் மிகவும் வல்லமைமிக்க நபராக மாறியிருக்கிறார். சென்ற ஆண்டு மோடியும் அவரது கட்சியும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. அசிமானந்தாவிற்கு பிணை வழங்கப்பட்டுவிட்டது. “ஒருசில மாதங்கள் காத் திருங்கள். மோடிஜி ஆட்சிக்கு வந்த பின்னர்,எங்கள் கிராமத்தின் மத்தியில் ஒரு மேடை அமைத்து, அசிமானந்தா செய்தவைகளை எல்லாம் ஒலி பெருக்கி மூலம் கூறிடுவேன்’’ என்று அசிமானந்தாவின் சகோதரர் 2013 ஜூனில் கூறியவை என் நினைவுக்கு வருகின்றன.

நன்றி: தி கேரவன், ஆகஸ்ட் 2015.

தமிழில்: ச.வீரமணி

Leave A Reply

%d bloggers like this: