சென்னை, ஆக. 1-

விருகம்பாக்கம் நடேசன் நகரில் 7 கிரவுண்டு இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தினை தற்போதைய மக்கள் தொகை மற்றும் மக்களின் மருத்துவ சோதனையை கணக்கில் கொண்டு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பிரசவம், மகப்பேறு மற்றும் பொது மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

இதற்காக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று (ஆக.1) மருத்துவமனை அருகில் மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் ஆர். முருகன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பகுதிச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.நந்தகோபால், தி.ஜெய்சங்கர், என்.ராஜா, பகுதிக்குழு உறுப்பினர்கள் எம்.வேல்மணி, ஈ.ரவி, டி.சந்துரு, டி.லெனின், ஏ,செல்வராஜ், விருகை குடியிருப்போர் சங்கத் தலைவர் அருமைராஜா உள்ளிட்ட திரளான மக்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தின் முடிவில் மருத்துவ அதிகாரி கோபாலகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளித்து முறையிடப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட அவர் மக்கள் தொகைக்கு ஏற்பதான் மருத்துவமனையை விரிவாக்கமுடியும் என்றார். அதற்கு சிபிஎம் தலைவர்கள், விருகம்பாக்கம் பகுதியில், கோயம்பேடு மார்க்கெட், பேருந்து நிலையம், மற்றும் நூற்றுக்கணக்கான குடிசைமக்கள் உள்ளனர். இவர்கள் கிராமங்களில் இருந்து வந்து இங்கு தங்கி வேலை செய்கின்றனர். ரேசன் கார்டு, வாக்காள அடையாள அட்டை எதுவும் இல்லாதவர்கள் இங்கே வசிக்கின்றனர்.

இவர்களை அரசு கணக்கில் கொள்ள வேண்டும். சிறு மருத்துவ தேவைக்கும் இப்பகுதி மக்கள் கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அல்லது சென்ட்ரல் அருகில் உள்ள பொது மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணிநேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதை கவனத்தில் கொள்வதாக அந்த அதிகாரி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.