சென்னை, ஆக. 1-

அடையாறு ஆற்றில் குதித்தவர் கதி என்ன என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.அடையாறு ஆற்றில் 40 வயது மதிக்கத் தக்க ஒருவர் வெள்ளியன்று மாலை குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேரம் படகு மூலம் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை.ஆற்றில் குதித்தவர் யார்? எந்த ஊர் என்ற விவரமும் தெரியவில்லை. அடையார் போலீசார் அந்த பகுதியில் காணாமல் போனவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்றும் விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

தீயணைப்பு படையினரின் முயற்சியும் பயன் அளிக்கவில்லை. இதனால் இறந்தவரின் உடல் தண்ணீரில் மிதந்தால் மட்டுமே அடையாளம் காண முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சனியன்று மீட்பு பணியில் யாரும் ஈடுபடவில்லை.

அடையாறு ஆற்றில் இந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 பேர் குதித்து தற்கொலை செய்துள்ளனர். திரு.வி.க. பாலம் மீது ஏறி ஆற்றில் குதித்து உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த 2 வருடத்தில் 50–க்கும் அதிகமானவர்கள் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

அந்த பாலத்தின் மீது ஏறி ஆற்றில் குதிப்பதை தடுக்க பாலத்தின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். அல்லது பாலத்தின் மீது இரும்பு கம்பி மூலம் உயரத்தை அதிகப்படுத்தினால் இது போன்ற சம்பவத்தை தடுக்க முடியும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.

Leave A Reply