கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவியர் விடுதிக்குள் புகுந்து 5 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார்.

தேன்கனிக்கோட்டை அருகில் உள்ளது அந்த அரசு உதவி பெறும் பள்ளி. இங்கு ஏழை மாணவியர் தங்கி படிக்கும் விடுதியும் உள்ளது. ஓசூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரின் மகள் இந்த விடுதியில் தங்கி 5 ஆம் வகுப்பில் படித்து வந்தார். பள்ளி வளாகத்தை ஒட்டி டி.பால்ராஜ் (31) என்பவர் வசித்து வருகிறார். திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு இடைவேளையின் போது பள்ளி விடுதிக்குள் புகுந்து 5 ஆம் வகுப்பு மாணவியை தூக்கி சென்று பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.இது குறித்து வியாழனன்று பள்ளி விடுதி நிர்வாகம் சார்பில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பால்ராஜை கைதுசெய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் மருத்துவமனையில் சிறுமியை சந்தித்து விசாரித்தனர்.

இந்த கொடிய சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை ஜெயராமன் தெரிவித்துள்ளார்.சம்பவம் நடந்து ஒருவார காலம் மூடி மறைத்தவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கொடகரை, குந்துமாரனப்பள்ளி, அஞ்செட்டி, அடைக்கலபுரம் என தொடரும் பாலியல் வல்லுறவுகளுக்கு முடிவு கட்டவும் பெண்கள்சிறுவர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: