குழித்துறை, ஜூலை 31 –

Sasi Perumal

செல்போன் டவரின் உச்சியில் சசிபெருமாள்.

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, பல்வேறு வகையில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த வரும் காந்தியவாதியுமான சசி பெருமாள், வெள்ளிக்கிழ மையன்று மரணமடைந்தார்.

குமரி மாவட்டம் உண்ணா மலைக்கடையில், மதுக்கடையை எதிர்த்து செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, சசிபெருமாளின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 60. சேலம் மாவட்டம் மேட்டுக் காட்டைச் சேர்ந்த சசிபெருமாள், தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த 30 ஆண்டுகளாக, காந்திய வழியில் தொடர்ச்சியாக அறப்போராட்டங்களை நடத்தி வந்தார். குடிப்பவர்களின் காலில் விழுந்து, குடிக்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்து வந்தார். மதுக்கடை களை மூடக்கோரி பலமுறை உண்ணாவிரதம் இருந்துள்ள அவர், 2013-ஆம் ஆண்டு 34 நாட்கள் தொடர் உண்ணாவிரதமும் மேற்கொண்டார். நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தில்லிக்குச் சென்றும் போராட்டம் நடத்தினார். கடந்த 2009-ஆம் ஆண்டு, சேலத்திலிருந்து சென்னை வரை, 400 கி.மீ. தூரத்திற்கு மது எதிர்ப்பு யாத்திரையையும் சசிபெருமாள் நடத்தினார்.

அண்மைக்காலமாக மது எதிர்ப்பு போராட்டங்களை மேலும் தீவிரமாக நடத்தி வந்த அவர், வெள்ளிக்கிழமையன்று, குமரி மாவட்டம் உண்ணா மலைக்கடையில் உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில், 1000 நாட்களைத் தாண்டி நடைபெற்று வரும் போராட்டத் தில் கலந்து கொண்டார்.

அப்போது காலை 8 மணியளவில் திடீரென அங்கிருந்த செல்போன் கோபுரத்தில் சசிபெரு மாள் ஏறினார். உண்ணாமலைக் கடை பேரூராட்சித் தலைவர் ஜெய சீலனும் (பாஜக) சசிபெருமாளு டன் சேர்ந்து கோபுரத்தில் ஏறினார். ஜெயசீலன் 75 அடி உயரத்திற்கு மேல் ஏறாமல் அங்கேயே அமர்ந்து கொள்ள, சசிபெருமாள் 200 அடி உயரம் ஏறி, கோபுரத்தின் உச்சிப்பகுதியை அடைந்தார்.

பின்னர் செல்போன் கோபுரத்தின் உச்சியில் நின்றபடியே, மதுக்கடையை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். ஏற்கெனவே அதிகாரிகள் வாக்குறுதி அளித்தபடி மதுக்கடையை மூடாவிட்டால், தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லூர் வட்டாரச் செயலாளர் ஜான், வட்டாரக்குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் இப்போராட்டத்தையொட்டி செல்போன் கோபுரம் அருகில் திரண்டனர்.

கோட்டாட்சியர் ராஜசேகர், மார்த்தாண்டம் காவல்துறை ஆய்வாளர் முத்து உள்ளிட்டோர் செல்போன் கோபுரம் இருந்த பகுதிக்கு வந்தனர். ஆனால், டாஸ்மாக் அதிகாரிகள் பகல் 12 மணிக்குத்தான் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.

இந்த 5 மணிநேரமும் சசிபெருமாள், கடும் வெயிலுக்கு இடையே செல்போன் கோபுரத்தின் உச்சியிலேயே நின்றிருந்தார்.

டாஸ்மாக் அதிகாரிகள் வந்தபோது, சசிபெருமாள் மயக்கமடைந்த நிலையில் காணப்படவே, தீயணைப்பு வீரர்கள் சென்று, சசிபெருமாளை கீழே இறக்கி, தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை குழித்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கிருந்த மருத்துவர்கள், சசிபெருமாள் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், குழித்துறை மருத்துவமனை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி, சசிபெருமாளின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சசிபெருமாளின் திடீர் மரணம், மது விலக்கு கோரி போராடும் சமூக ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: