அச்சத்தில் 69வது வட்ட கவுதமபுர மக்கள்

சென்னை கொளத்தூர் பகுதிக்குட்பட்ட 69வது வட்டம் கவுதமபுரத்தில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு உரிய பராமரிப்பு இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எப்போதும் அச்சத்திலேயே இருக்கவேண்டியுள்ளது.

இதுகுறித்து விபரம் வருமாறு,

சென்னை மாநகராட்சி 69வது வட்டம் கவுதபுரம் ஜவஹர் சாலையில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு கடந்த 1968ல் கட்டப்பட்டது. 448 குடியிருப்புகளை கொண்ட இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகவே உள்ளன. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப குடிநீர், கழிவு நீர் மற்றும் மின்வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. கோடைக் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதும் மழைக்காலங்களில் தரைத் தளத்தில் வெள்ளம் புகுவதும், மேல்தளத்தில் நீர் கசிவு மின் தடை ஏற்படுவதும் சகஜம். குடிசைமாற்றுவாரியத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த சத்யா, பானு, பாத்திமா, அமுதா, கமலா ஆகியோர் ஒருசேர கூறினர்.

சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு பராமரிப்பின்றி உள்ளது. அவ்வப்போது பால்கனி, படிக்கட்டு பகுதிகள் இடிந்து விழுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். வீடுகள் தோறும் சிறு மோட்டார் அமைத்து தண்ணீர் தேவையை சுயமாக பூர்த்தி செய்து கொண்டாலும் குடிநீரில் கழிவு கலந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது குறித்து புகார் அளித்தாலோ, போராட்டம் நடத்தினாலோ மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக ஏற்பாடுகளை செய்கிறதே தவிர நிரந்தரமாக தீர்வு காண மறுக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 69வது வட்டகிளைச் செயலாளர் தமிழ்மணி கூறுகையில், குடிசை மாற்று வாரிய கட்டிடங்களில் படிக்கட்டுகள் சிதைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே காட்சியளிக்கின்றன. மழைக் காலங்களில் மின்சாரம் தாக்கி பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எந்த நேரத்தில் மேல் தளம் பெயர்ந்து விழுமோ என்ற அச்சத்தோடு குடும்பம் நடத்தவேண்டியுள்ளது. கழிவு நீர் அடைப்பு சுற்றுச்சூழலை பாதிக்கிறது. திமுக தலைவர்களில் ஒருவரான ஸ்டாலின் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் மக்கள் நலன்களில் குறிப்பிட்டு சொல்லும் படி எதுவும் செய்யவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்பகுதி புறக்கணிக்கப்படுவதாக திமுக பிரமுகர்கள் கூறுகின்றனர். ஆனால் மக்களின் நலனுக்காக மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

ஜவகர் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் இப்பகுதியில் பலமுறை சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. போதையில் குடிமகன்கள் சாலையில் விழுந்து கிடப்பதும் பொதுஇடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்வதும் இப்பகுதி மக்களை முகம்சுளிக்க வைக்கிறது. இதனால் டாஸ்மாக் கடைதிறந்தவுடன் பெண்கள் அந்த சாலை வழியாக செல்ல அச்சப்படுகிறார்கள்.எனவே அந்த கடையை அங்கிருந்து அகற்றவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் டி பிளாக் 141 வது குடியிருப்பு அருகில் உள்ள பால்கனி இடிந்து விழுந்தது. நல்லவேலையாக உயிர்சேதம் ஏற்படவில்லை. கட்டிடங்களின் பெரும்பகுதிகளில் விரிசல் விழுந்துள்ளது. பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்குள் அரசு நிர்வாகங்கள் விழித்துக் கொள்ளுமா? மாநகராட்சி, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், மின்வாரியம் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தின் மெத்தனத்தால் அவதிப்படுவது சாமான்ய மக்கள் தான். இதனை இனியும் அனுமதிக்கமுடியாது. எனவே இப்பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்காக மக்களையும் அரசியல்கட்சி மற்றும் சமூக இயக்கங்களையும் ஒன்று திரட்டி வலுவான போராட்டம் நடத்தவுள்ளதாக சிபிஎம் கொளத்தூர் பகுதிக்குழு உறுப்பினர் எம்.ஏ.அயூப்கான் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.