நாடாளு மன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி கூடியதிலிருந்தே முடங்கிக் கிடக்கிறது. இதற்குக் காரணம், ஐபிஎல் மோசடியில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள லலித் மோடிக்கு உதவி செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசந்தர ராஜே ஆகியோரும் மத்தியப் பிரதேசத்தில் நடந்த ‘வியாபம்’ ஊழலுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகானும் பதவிவிலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்காததே. கடந்த ஓராண்டில் ஊழலற்ற நிர்வாகத்தை கொடுத்தோம் என ஊர் ஊராக தம்பட்டம் அடித்து சுய விளம்பரம் தேடுகிறது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு.

‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்பது போல மோடி வகையறாக்களின் பொய் மூட்டைகள் அம்பலத்துக்கு வந்துள்ளன. அதாவது, ஐபிஎல், வியாபம், மகாராஷ்ட்டிர அமைச்சர்கள், ஜார்க்கண்ட் முதலமைச்சரின் பொதுவிநியோக முறையில் 36,000 கோடி ரூபாய் ஊழல்கள் என பட்டியல் வெளியாகியிருப்பது பாஜக வினரின் முகத்திரையைக் கிழித்துள்ளது. இதற்கு பிறகும், குற்றச்சாட்டுக்குள்ளானவர்களை பதவி நீக்கம் செய்யவும் எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தவும் மோடியின் அரசு முன்வரவில்லை. உண்மைகளை மூடி மறைப்பதற்காக அவையை முடக்கிவிட்டு மக்கள் ‘வரிப்பணம் வீணாகிறது’ என எதிர்க்கட்சிகள் மீது ஆளும் கட்சியினர் பழி சுமத்துகிறார்கள். ஊடகங்களும் கூச்சல் குழப்பம், சபை முடக்கம், வரிப்பணம் வீணாகிறது என்றே செய்தி வெளியிடுகின்றன.
இதைக் காட்டிலும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பதவிவிலகி விசாரணையை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து நடவடிக்கை எடுப்பது நாட்டுக்கு நல்லது. காங்கிரஸ் ஆட்சியில் 1995 ம் ஆண்டு அமைச்சராக இருந்த சுக்ராம் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தபோது அவை நடவடிக்கைகளின் 74 விழுக்காடு நேரம் பாஜகவினரால் முடக்கப்பட்டது. இப்படி வரிப்பணத்தையும் நேரத்தையும் வீணாக்கியவர்கள் பின்னர் என்ன செய்தார்கள்? தண்டனை பெற்ற அவரை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டவர்கள்தானே பாஜகவினர். நாடாளுமன்ற கூட்டம் நடத்த 1951-களில் நிமிடத்திற்கு 100 ரூபாய் செலவானது. தற்போது ரூ.20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மக்களின் வரிப்பணம் வீணாவதை இடதுசாரிகள் ஒருபோதும் விரும்பியதில்லை. மக்கள் வரிப்பணம் வீணாவதற்கு முக்கியக் காரணமே ஆளும் பாஜக தான். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாடாளுமன்ற செயல்பாட்டை முடக்கிய போது அதன் மூலம் 2 ஜி அலைக்கற்றை ஊழலை தூய்மைப் படுத்தினோம் என விளக்கம் கொடுத்தவர் அருண்ஜெட்லி. தற்போது லலித்மோடி பிரச்சனைகளையும் வியாபம் ஊழலையும் தூய்மைப்படுத்த எதிர்க்கட்சிகள் போராடுகின்றன. இதனைக் குறை கூறுவது எப்படிச் சரியாக இருக்கும்? நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க் கட்சிகள் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவது ஜனநாயகக் கடமையாகும். காங்கிரஸ் வழியில் பாஜகவும் குற்றவாளிகளைப் பாதுகாப்பது சரியல்ல. மக்கள் பிரச்சனைகளை விவாதிக்காமல் மசோதாக்களைக்கூட அவசரச் சட்டங்களாக்கிவிடலாம் என்ற பாஜக அரசின் போக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்கிவிடும். மக்களின் கூர்ந்த கண்காணிப்பும் கருத்துருவாக்கமுமே ஆளுவோர்க்குக் கடிவாளங்களாக அமையும்.

Leave A Reply

%d bloggers like this: