திருவள்ளூர், ஜூலை 31-

திருத்தணி சலவை தொழிலாளர் சங்கத்தினர் தலைவர் கே.வி.குப்புராஜ் தலைமையில் பெண்கள் உள்பட 100–க்கும்
மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துவிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:–

திருத்தணி சலவைத் தொழிலாளர் குடும்பத்தினராகிய நாங்கள் 3 ஆண்டு காலமாக முதல்–அமைச்சர் தனிப்பிரிவு முதல் திருத்தணி வட்டாட்சியர் வரை 39 மனுக்களை வழங்கியுள்ளோம். எங்களது கோரிக்கையான சலவைத்துறை பணி அமைத்தல், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குதல் ஆகிய கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து சலவை தொழிலாளர்களுக்கு சொந்தமான வண்ணார் குட்டையில் திருத்தணி நகராட்சி சார்பில் சலவைத்துறை பணி துவங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் திருத்தணி பகுதியில் சலவை தொழில் செய்துவரும் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பிழைக்க வழியின்றி அவதிப்பட்டு வருகிறோம்.

திருத்தணி வருவாய் துறையினர் தகுதியுள்ள குடும்பங்களை தேர்வு செய்து, அவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க அரசுக்கு சொந்தமான புறம் போக்கு இடங்களை தேர்வு செய்து மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பியும் இது வரை பட்டா வழங்கவில்லை. எனவே கோரிக்கைகளை உடனே நிறை வேற்ற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Leave A Reply