சென்னை, ஜூலை 31-

போரூர் ஏரியை முழுமையாக பாதுகாத்து பராமரிக்க, “போரூர் ஏரி பாதுகாப்பு மக்கள் குழு” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:

போரூர் ஏரியின் மையப்பகுதியில் பெரிய கரை அமைக்கப்பட்டு வந்தது. அதனை ஜூலை 8 அன்று   மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ் ஆய்வு செய்தார். ஏரியின் ஒரு பகுதி தனியாருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அந்தப் பகுதியை அரசு கையகப்படுத்தி ஏரியை முழுமையாக பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜூலை 9 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரில் மனு அளித்தார்.

அதன்மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், ஜூலை 17 அன்று போரூர் ரவுண்டானா அருகே க.பீம்ராவ் எம்எல்ஏ தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக ஜூலை 20 அன்று தலைமைச் செயலகத்தில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

இதனிடையே போரூர் ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பணிக்கு பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்து விசாரணை நடந்து வருகிறது. ஏரியை முழுமையாக பாதுகாக்க கோரிக் பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றனர்.

இந்தச்சூழலில், க.பீம்ராவ் தலைமையில் போரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் புதனன்று (ஜூலை 29) நடைபெற்றது.

இதில், “போரூர் ஏரி பாதுகாப்பு மக்கள் குழு” அமைக்கப்பட்டது. இந்தக்குழுவின் தலைவராக க.பீம்ராவ் எம்எல்ஏ, செயலாளராக கே.தண்டபாணி (ராமகிருஷ்ணா நகர் குடியிருப்போர் நலச் சங்கம்), பொருளாளராக ஜி.நடராஜன் (போரூர் மங்கள நகர் மக்கள் நலவாழ்வு சங்கம்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத்தலைவர், துணைச் செயலாளர்கள் உள்ளடக்கிய 25 பேர் கொண்ட செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.