புதுச்சேரி, ஜூலை 31-

தமிழகத்தில் உள்ள கைவினைக் கலைஞர்கள் வாழ்வு செழிக்கவும், உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யவும் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பூம்புகார் விற்பனைக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி புதுச்சேரியிலும் ஆண்டு தோறும் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் துவங்கிய கண்காட்சியை புதுவை டிஐஜி கண்ணன் ஜெகதீசன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கண்காட்சியில் கைவினைப் பொருள்கள், கைத்தறி ஆடைகள், சணல் பொருள்கள், மதுரை சுங்கடி, போச்சம்பள்ளி, கோட்டா சேலைகள், நகைகள், வெண்கல பொம்மைகள், பாரம்பரிய பித்தளை விளக்குகள், தஞ்சாவூர் ஓவியதட்டு, மரச்சிற்பம், கற்சிற்பம், ராஜஸ்தான், தஞ்சாவூர் ஓவியங்கள், பேப்பர் கூழ் ஓவியம், பாட்னா பொம்மைகள், லக்னோ சிக்கன் துணி வகைகள், பளிங்கு தூள் சிலைகள், சுட்டமண் சிற்பங்கள் நாடு முழுவதும் இருந்து வந்துள்ள கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மக்கள் கண்காட்சியில் பங்கேற்று தங்களுக்கு தேவையான பொருள்களை பெற்றுக் கொள்ளலாம். நடப்பாண்டு மொத்த விற்பனை இலக்காக ரூ.15 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பூம்புகார் மேலாளர் சி.கோபி தெரிவித்துள்ளார். பித்தளை விளக்குகள், வெண்கல பொருள்களுக்கு 15 சதம் தள்ளுபடியும், பிற பொருள்களுக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

Leave a Reply

You must be logged in to post a comment.