அம்பத்தூர், ஜூலை 31-

ஆவடி எம்.ஆர்.எப். நகரில் வசித்தவர் லயன் முருகன் (44). இவர் ஆவடி நகராட்சி 36வது வார்டு கவுன்சிலராக இருந்தார். இவர் பகுஜன்சமாஜ் கட்சி மாநிலச் செயலாளராகவும் இருந்தார்.

முருகனும் முன்னாள் அதிமுக கவுன்சிலருமான ரமேசும் கடந்த 15ம் தேதிஇரவு ஆவடி சேக்காடு அண்ணாநகரில் உள்ள பள்ளி மைதானத்தில் காரில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டர் பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் காருக்குள் இருந்த முருகனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து ஆவடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) அன்று சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் மானாமதுரையைச் சேர்ந்த  ரவிக்குமார் (37), ராஜசிங்கம் (27) ஆகிய இருவரும் சரணடைந்தனர்.

சரணடைந்த அவர்களை காவலில் எடுத்துவிசாரித்தனர். விசாரணையில் பட்டாபிராம், அண்ணாநகர் விவேகானந்தா அவென்யூ 4 வது தெருவில் வசிக்கும் ஆவடி நகராட்சி 36 வது வார்டு அதிமுக செயலாளர் ஆனந்தராஜ் (34), மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர்மோகனகிருஷ்ணன் (38), ஆட்டோஓட்டுநர் ராமன் (36), இவர்களது நண்பர் சந்திரசேகர் (29) ஆகியோர்முருகன் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்ததும், மோகனகிருஷ்ணன், ராமன் இருவரும் ஆனந்தராஜின் அண்ணன்கள் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து காவல் துறையினர் ஆனந்தராஜ், மோகனகிருஷ்ணன், ராமன்,சந்திரசேகர் ஆகியோரை வியாழக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் அனைவரையும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் இக்கொலையில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (30), சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பாண்டி ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: