ஆம்பூர், ஜூலை 31-

வளர்ச்சிப் பணிகளுக்கு ஊராட்சிமன்ற துணைத் தலைவர் தடையாக இருப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் ஊராட்சிமன்ற துணைத் தலைவராக இருப்பவர் கோவிந்தராஜ். இவர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளான தாய்திட்டத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், மின் இணைப்புகள், குடிநீர் உள்ளிட்ட பணிகளில் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய காசோலைகளில் (செக்) கையெழுத்திடாமல் அலைக்கழித்து வருகிறார். மேலும் கிராம சபா கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.

ஊராட்சி மன்றத் தலைவரிடம் அவ்வப்போது பணம் கேட்டு அவரை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. ஊராட்சி மீது பொய்யான துண்டு பிரசுரத்தை வெளியிட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஊராட்சிமன்ற தலைவர் பாஸ்கர் தலைமையில் ஆம்பூர்-பேர்ணாம்பட்டு சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.  பின்னர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தைக்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேசியமணியை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர் சம்பந்தப்பட்ட துணைத் தலைவரை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறினார். மேலும் ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கான, காசோலையில் கையெழுத்திட வேறு ஒருவரை நியமிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து துணைத் தலைவரிடம் கேட்டபோது, ஊராட்சிமன்ற தலைவராகிய பாஸ்கர் திமுகவைச் சேர்ந்தவர்.  அவர் ஊராட்சியின் நிர்வாகத்தை தன்னிட்சியாகவே நடத்த முயற்சி செய்கிறார். மேலும் என்னுடைய கையெழுத்தை எனக்கு தெரியாமலே போட்டு பணத்தை எடுக்கிறார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: