சென்னை, ஜூலை 31-

அடிப்படை ஒய்வூதியத்தை அகவிலைப்படியுடன் இணைக்க வேண்டும் என்று அகில இந்திய ஓய்வூதியதாரர்கள் சங்கங்களின் சம்மேளனம் (ஏ.ஐ.எஃப்.பி.ஏ) கேட்டுக் கொண்டுள்ளது. சம்மேளனத்தின் 36வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநாடு சென்னை தி.நகரில் சம்மேளனத்தின் தலைவர் வெங்கடாச்சாரி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சுந்தரம் தொடங்கி வைத்தார். அவர் தனது உரையில் ஓய்வூதியதாரர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை குறிப்பிட்டார். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை பாதுகாக்க சம்மேளனத்தின் சார்பில் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஓய்வூதியதாரர்கள் இனி ஓய்வு பெற்றுவிட்டோம் யாருக்கும் நாம் பயன்படப் போவதில்லை என்ற முடிவுக்கு வராமல் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றும் அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். முன்னதாக பொதுச் செயலாளர் டி.பாலசுப்பிரமணியன் ஆண்டறிக்கையை தாக்கல் செய்து பேசினார். மாநாட்டில் இந்தியா முழுவதும் வந்திருந்த ரயில்வே, தபால், தந்தி, தொலைதொடர்பு உள்ளிட்ட துறைகளில் ஓய்வு பெற்றவர்கள் பேசினர்.

அகவிலைப்படியை அடிப்படை ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும், நிலுவையில் உள்ள ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், ஒய்வூதியதாரர்களுக்கு மத்திய மாநில அரசுகள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மூத்த குடிமக்கள் பாராட்டப்பட்டனர். எஃப் என் பிஓ பொதுச் செயலளர் டி தியாகராஜன், உள்பட பலர் பேசினர்.என். கலிவரதன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.