திருவண்ணாமலை ஜூலை 8-
திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே எழுந்துள்ள தீண்டாமைச் சுவரை உடனே உடைத்தெடுக்கப்பட வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.திருவண்ணாமலை நகராட்சி பேருந்து நிலையம் அருகே, 1 வது வார்டில் அமைந்துள்ளது டாக்டர் அம்பேத்கர் நகர். இப்பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆயிரக்கணக்கான அருந்ததிய இன மக்கள் வசித்து வருகின்றனர். கூலித் தொழில், நகராட்சியில் துப்புறவு பணி உள்ளிட்ட தொழில் செய்பவர்களே இங்கு அதிகமாக வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள் முத்து வினாயகர் கோயில் தெருவழியாக, ரயில் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், உழவர் சந்தை,நகராட்சி மகப்பேறு மருத்துவமனை, கடைவீதிகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்தும் சாலையை மறித்து தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. அருந்ததிய இன மக்கள் தங்கள் தெருவுக்குள் நடமாடக்கூடாது என்ற எண்ணத்தில் முத்து வினாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி, ஒவ்வொறு வீட்டாரிடமும் பணம் வசூலித்து இந்ததீண்டாமைச்சுவரை எழுப்பியுள்ளனர்.கடந்த மாதம் ஒரு நள்ளிரவில், அருந்ததியர் தெருவும்,
முத்துவினாயகர் கோயில் தெருவும் சந்திக்கும் இடத்தில் கருங்கற்களால் 5 அடி உயரத்திற்கு மேல் தடுப்பு சுவர் எழுப்பியுள்ளனர். இந்த தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளதால், அருந்ததிய மக்கள், வேலூர், அவலூர்பேட்டையிலிருந்து திருவண்ணாமலை பேருந்து நிலையம் வரும்சாலை வழியாக, பேருந்து நிலையத்தை கடந்து சுற்றிக்கொண்டு தான் நகரின் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. பேருந்து நிலையத்தை கடக்கும் போது போக்குவரத்து நெரிசல்அதிகமாக ஏற்படுவதால், அந்தசாலையில் பயணம் செய்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆண்டாண்டு காலமாகபொது பாதையாக அனுபவித்து வந்த சாலையை மறித்து சுவர்கட்டியுள்ளதால் ஒடுக்கப்பட்ட அருந்ததிய மக்கள் வேதனையையும்,
துக்கத்தையும் தங்கள் மனதில் வைத்து தவித்து வருகின்றனர். அண்மையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பலபோராட்டங்கள், அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு, ஆலய நுழைவுப் போராட்ட வெற்றிகள் அம்பேத்கர் நகர் மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. இதனால்தங்களுக்குரிய பாதை மறிக்கப்பட்ட கொடுமையிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி திருவண்ணாமலை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.இதனடிப்படையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பி.செல்வன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் தங்கமணி, அழகேசன், ராமதாஸ்,அந்த இடத்தைப் பார்வையிட்டனர்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட தீண்டாமை ஒழிப்புமுன்னணி மாவட்ட செயலாளர் பி.செல்வன் கூறியபோது,அருந்ததியர் மக்கள் செல்லும் இச்சாலையை தீண்டாமை எண்ணத்தோடு சுவர் கட்டி சாலையை அடைத்து மறித்துள்ளனர் என்றார்.இந்த சுவரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும். தவறினால், மதுரை மாவட்டம் உத்தபுரத்தை போல திருவண்ணாமலை மாவட்டத்திலும் மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் கூறினார்.
அதேபோல், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் தங்களுக்கு பக்கபலமாக இருப்பதால், தீண்டாமை சுவரை உடைத்து, தங்கள் கோரிக்கையை சாதித்து விட முடியும் என்று அம்பேத்கர் நகர் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.