தேனி, மார்ச் 20-தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ. 12 கோடிவரை மோசடி செய்த நிறுவனம் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஒரே நாளில் 100 பேர் வரை புகார் அளித்தனர்.காமாட்சிபுரம் அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவர் ஆண்டிபட்டியில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். அதிக பணம் தருவதாகக் கூறியும், அவ்வப்போது சில்சலுகைகளையும் அளித்ததால், ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு மற்றும்அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஏலச்சீட்டில் சேர்ந்தனர்.ஒவ்வொருவரும் ரூ. 20ஆயிரம் முதல் லட்சம்ரூபாய் வரை செலுத்தினர். சிலர் சீட்டுப் பணம் கட்டியதும், இடையிலேயே கட்டிய பணத்திற்கு மேலாக தொகையைப் பெற்றனர். பலர் முழுத் தொகை கட்டியபிறகு கழிவுத் தொகையுடன் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என இருந்தனர். இதன்படி, மலைச்சாமிக்கு பல கோடி ரூபாய் வசூலானது.இந்நிலையில், திடீரென மலைச்சாமி ஏலச்சீட்டு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார். இதனால் இந்நிறுவனத்தில் பணம் கட்டிய ஏராளமானோர் தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் செய்தனர்.தேனி எஸ்.பி. மகேஷ் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜாஸ்மீன் விசாரணைநடத்தினார். இதில் மோசடியில் ஈடுபட்ட மலைச்சாமி, இவரது மனைவி பரிமளா,சகோதரர் பாண்டியன், மனைவி மீனா, மலைச்சாமியின் நண்பரான கீரிப்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இதில் ஒச்சப்பன் மற்றும் மலைச்சாமி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடிவருகின்றனர். வியாழனன்று ஒரே நாளில் மட்டும்கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தேனி குற்றப்பிரிவு காவல் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தனர். இந்த புகாரில் மட்டும் சுமார் ரூ. 5 கோடிக்கும் மேலாக மோசடி செய்தது தெரியவந்துள்ளது.இதற்கிடையில் மலைச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் உள்ள சொத்துகள் பற்றிய விவரங்களையும் சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.