திருப்பூர், ஜூலை 26-திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு சேடர்பாளையம் பகுதியில் குடிநீர் பிரச்சனைக்கு வாக்குறுதி அளித்தபடி தீர்வு காணாவிட்டால் சாலை மறியல் செய்யும் நிலை ஏற்படும் என்று இப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவர் ச.நந்தகோபால், ஒன்றியச் செயலாளர் ஆ.சிகாமணி, கமிட்டி உறுப்பினர் பி.மகேந்திரன் ஆகியோர் தலைமையில் சேடர்பாளையம் பகுதி மக்கள் புதனன்று மாநகராட்சியின் இரண்டாவது மண்டல அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு மண்டலத் தலைவர் மற்றும் உதவி ஆணையர் இல்லாத நிலையில் அங்கிருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர். சேடர்பாளையத்தில் சுமார் ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு மேட்டுப்பாளையம் குடிநீர் மாதம் ஒரு முறையும், பவானி குடிநீர் 25 நாட்களுக்கு ஒரு முறையும் மட்டுமே வருகிறது. இது தவிர இரண்டு ஆழ்துளை குழாய்களில் ஒன்று பழுதடைந்து உள்ளது. ஆகவே, அவ்வப்போதுலாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் இரவு நேரங்களில் மட்டுமே வருகிறது.
இதனால் இப்பகுதி மக்கள் கடும் குடிநீர் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே இங்கு சின்டெக்ஸ் தொட்டி அமைத்து சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அதன் பிறகும் பழைய நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே உடனடியாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.