கோவை, ஜூலை 19-நுகர்வோரை மன உளைச்சலை உருவாக்கிய வழக்கில், ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கோவை, கவுன்டன்பாளையம் ஆர்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆர்.என்.கிருஷ்ணகுமார். கட்டுமான துறையின் ஆலோசகராக செயல்பட்டு வரும் கிருஷ்ணகுமார் ஏர்டெல் நிறுவனத்தில் ப்ராட்பேண்ட் இணைப்பு பெற்று பயன்படுத்தி வந்துள்ளார். இதற்கான கட்டணத் தொகையை மாத,மாதம் முறையாக செலுத்தியும் வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து கட்டணத் தொகை குறித்த கடிதம் (பில்) வராததால் அக்குறிப்பிட்ட மாதம் கட்டணத்தை செலுத்தவில்லை.
இதையடுத்து, இவரது பிராட்பேண்ட் இணைப்பை எவ்வித முன்னறிவிப்புமின்றி ஏர்டெல் நிறுவனம் துண்டித்தது. இதன்பின், மூன்று மாதம் கழித்து செப்டம்பர், அக்டோபர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான பில் தொகையும், அபராதமாக 6 ஆயிரம் கட்டவேண்டும் என குறுஞ்செய்தி மூலம் ஏர்டெல் நிறுவனம் தொடந்து வலியுறுத்தி வந்துள்ளது.இதனையடுத்து, கட்டணத் தொகை குறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறு கிருஷ்ணகுமார், ஏர்டெல் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், கட்டண விவரம் குறித்த தகவலை தரமறுத்த ஏர்டெல் நிறுவனம், கட்டண தொகை உடனே செலுத்துமாறு பல்வேறு தொலைப்பேசி எண்களில் இருந்து தொடர்ந்து பல குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டே இருந்தது.
இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான கிருஷ்ணகுமார், ஏர்டெல் நிறுவத்தின் மீது கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதியன்று கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சோமனூர் ஆறுச்சாமி மூலம் வழக்கு பதிவு செய்தார். இதில் அனுப்பாத பில்லுக்கு கட்டணம் செலுத்தக்கோரி, ஏர்டெல் நிறுவனம் தொடர்ச்சியாக தன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. எனவே, ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து நஷ்ட ஈடு பெற்று தரவேண்டும் என வழக்கில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நிதிபதி தண்டபாணி, நுகர்வோரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதற்காக ஏர்டெல் நிறுவனம் ரூ.25 அபராதமும், வழக்குச் செலவிற்கான ரூபாய் ஆயிரமும் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.