மும்பை, ஜூலை 17-மும்பையில் அரசு மருத்துவமனைகளில் செயற்கை சுவாசக் கருவி (வெண்டிலேட்டர்) வசதி போதுமான அளவு இல்லாததால் இரட்டைக் குழந்தைகள் பலியான சம்பவம் நடந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய் ஜெய்ஸ்வால் (31). இவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கத்கோபரில் உள்ள நர்சிங் ஹோமில் பிரசவத்திற்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு ஜூன் 13ம் தேதி இரட்டைப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தைகள் பூரண வளர்ச்சியை அடையாததால் அவர்களை வெண்டிலேட்டரில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நர்சிங் ஹோம் மருத்துவர்கள் குழந்தைகளை வெண்டிலேட்டர் வசதியுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். இதனையடுத்து குழந்தைகளை எடுத்துக் கொண்டு விஜய் ஜெய்ஸ்வால், மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை, சியோன் மருத்துவமனை மற்றும் வாடியா மருத்துவமனைக்கு மாறி மாறி சென்றுள்ளார். ஆனால், அங்கு போதுமான அளவு வெண்டிலேட்டர் வசதி இல்லாததால் அவர்கள் குழந்தையை அனுமதிக்க மறுத்துவிட்டனர். மேலும், கூடுதல் வெண்டிலேட்டர் கருவிகள் வந்தவுடன் அழைப்பதாகத்தெரிவித்துள்ளனர்.
இதனால் வேறுவழியில்லாமல் குழந்தைகளை மீண்டும் நர்சிங் ஹோமிற்கே கொண்டு வந்து சேர்த்துள்ளார் விஜய் ஜெய்ஸ்வால். ஆனால், நாள் செல்லச் செல்ல குழந்தைகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஜூன் 18ம் தேதி இரண்டு குழந்தைகளும் இறந்தன. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த போது விஜய் ஜெய்ஸ்வாலைத் தொடர்பு கொண்ட கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனையினர், மருத்துவமனையில் இன்குபேட்டர் மட்டும் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விஜய் ஜெய்ஸ்வால் தெரிவிக்கையில், எனது வாழ்நாளில், எனது மகள்கள் பிறந்து இறந்த ஐந்து நாட்கள் மிகவும் கடினமானது என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளுக்கு குழந்தைகள் பராமரிப்பிற்கான வெண்டிலேட்டர்கள் வாங்குவது தொடர்பான கோப்புகள் பாம்பே நகராட்சி மன்றத்தில் நிலுவையில் இருந்ததாகவும். தற்போது உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாதத்தில் இப்பிரச்சனை சீர் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில், கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை மற்றும் சேத் ஜி.எஸ்.மருத்துவக் கல்லூரி இந்தியாவில் மருத்துவக் கல்வியை கற்றுத்தந்த முதல் கல்வி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மும்பையில் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு படுக்கை வசதி போன்றவை இல்லாததால் மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய சூழல் நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.