ப.பாளையம், ஜூன் 20-பள்ளிபாளையம் வட்டாரத்தில் நாற்று நடவு மூலம் துவரை சாகுபடி செய்யும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.துவரை நடவுக்கு ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் ஏற்றது. ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதுமானது. நாற்று நடவு மூலம் துவரை சாகுபடி செய்வதால் பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம். வறட்சியைத் தாங்கி, வேர் வளர்ச்சி அதிகரித்து விளைச்சல் இரண்டு மடங்கு கிடைக்கும். துவரை நாற்றங்கால் தயாரித்திட பாலித்தீன் பைகளில்(6-4அங்குலம்) செம்மண், மணல், மக்கின தொழு உரம் நிரப்ப வேண்டும். வம்பன்-2, கோ-6, கோ.7, எல்ஆர்ஜி-41 மற்றும் ஆஷா போன்ற கூடுதல் மகசூல் திறன் கொண்ட விதை நேர்த்தி செய்த துவரை விதைகளை தேர்வு செய்ய வேண்டும். இவற்றை 1 சதவிகித கால்சியம் குளோரைடு மூலம் விதை கடினம் செய்து ஒரு பாலித்தீன் பையில் 2 விதைகளை ஊன்றி நிழலில் வைத்து பூவாளி அல்லது பைப் மூலம் நீர் பாய்ச்ச வேண்டும். நாற்றின் வயது 30-40 நாட்களாகும்.மண் பரிசோதனை செய்த வயலில் 6அடிக்கு 3அடி இடைவெளியில் துவரை நாற்றுக்களை நடவு செய்து பூக்கும் தருணத்தில் 2சத டிஎபி கரைசலை தெளிக்க வேண்டும்.
திருந்திய நெல் சாகுபடி, நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறைகளைப் போல துவரை நாற்று நடவு முறையும் புதிய தொழில் நுட்பங்களைப் பின்பற்றியுள்ளதால் விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும். துவரை நாற்று நடவு செயல் விளக்கம் அமைக்கும் விவசாயிகளுக்கு ஒருஎக்டருக்கு ரூ.15000 மானிய உதவி வழங்கப்படுகிறது. விவசாயிகளே சொந்தமாக துவரை சாகுபடி செய்தால் ரூ7500-(50 சதவிகிதம்) மானியம் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் பள்ளிபாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் முன் பதிவு செய்ய வேண்டும். மூதுரிமை பட்டியலின் படி மானிய உதவி பெறலாம் என பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் பா.முரளிதரன் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.