உடுமலை, ஜூன் 20-உடுமலை அரசு மருத்துவமனையில் சுகாதார செவிலியர்களை ஒருமையில் பேசி தரக்குறைவாய் நடத்தும் மகப்பேறு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உடுமலைப் பேட்டை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக இருப்பவர் ஜோதிமணி. இவர் இம்மருத்துவமனைக்கு வரும் கிராமப்புற பேறு கால பெண்களுக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் அலட்சியத்துடன் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதுதவிர பிரசவ காலங்களில் சிகிச்சைக்கு வருபவர்களை தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பார்க்குமாறு கட்டாயப்படுத்துவதும், இதன்காரணமாக ஒரு சில இறப்புகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இங்கு பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்களை தரக்குறைவாக ஒருமையில் பேசியும், நடத்தியும் வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட மகப்பேறு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செவிலியர் எம்.மகேஸ்வரி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் செவிலியர்களின் கோரிக்கைகளை விளக்கி ஏ.ஆரோக்கிய சார்லஸ், திருப்பூர் மாவட்ட கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் சத்தியவாணி முத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜெய்பால்ராஜ், வருவாய் துறை கிராம உதவியாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் கே.ஆறுமுகம், சாலைப்பணியாளர் சங்க செயலாளர் என்.சிவக்குமார், எம்.முருகானந்தம், மக்கள் நலப்பணியாளர் சங்கத்தின் நிர்வாகி டி.சேகர், அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.