உதகை, ஜூன் 16-உதகையில் உள்ள அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் வெள்ளியன்று துவங்கி இரண்டாவது நாளாக (சனி) தொடர்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கு கடந்த 1995 ம் ஆண்டு வருடத்திற்கு பிறகு கூலி உயர்வு குறித்த ஊதிய ஒப்பந்தம் காணப்படவில்லை. எனவே. கூலி மறுநிர்ணயம் செய்திட வேண்டும். இங்கு பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரத்திரம் செய்திட வேண்டும். பதவி உயர்வு, மருத்துவ செலவினங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த நோட்டிடீஸ் நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் குன்னூரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை தோல்வி ஏற்பட்டதால் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் வெள்ளியன்று துவங்கியது. இந்நிலையில் இரண்டாவது நாளாக சனியன்றும் தொழிலாளர்கள் பணி செய்யாமல் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர். இதனால் தேயிலை தூள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும், கட்டப்பட்டு, கரும்பாலம், மஞ்சூர், மகாலிங்கம், மேற்குநாடு, பிக்கட்டி உள்ளிட்ட 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையின் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு இன்ட்கோ- சிஐடியு சங்கத்தின் பொதுச்செயலாளர் காந்தி மற்றும் நிர்வாகிகள் தலைமை தாங்கினர். இதனிடையே, இந்த வேலைநிறுத்தத்தை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் ஜூன்-18ம் தேதி தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.