பொள்ளாச்சி, ஜூன் 9-பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் பணியில் இருந்த துப்புரவுத் தொழிலாளியைத் தாக்கியர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து துப்புரவுத் தொழிலாளர்கள் சனிக்கிழமையன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில், 33 துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று பகுதிவாரியாக தண்ணீர் திறந்து விடுவதற்காக, வேல்முருகன் எனும் துப்புரவுத் தொழிலாளி சென்றுள்ளார்.
இதில், மாலை 7.20 மணிக்கு 8 வது வார்டில் தண்ணீர் திறந்து விட்டுக் கொண்டிருந்த வேல்முருகனுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த மோதிராபுரம் ரவி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், வேல்முருகனை, ரவி தரக்குறைவாகப் பேசியுள்ளார். மேலும், தண்ணீர் திறந்துவிடுவதற்கு பயன்படுத்தப்படும் ராடுகளைப் பிடுங்கி சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்.பின்னர், பாதிக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளியான வேல்முருகன், அப்பகுதியிலுள்ள கிழக்கு காவல்நிலையத்திற்குச் சென்று ரவி மீது புகார் அளித்தார். ஆனால், காவல் துறையினர் ரவி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து துப்புரவுத் தொழிலாளர்கள் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு சனிக்கிழமையன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், அலட்சியமாக நடந்து கொண்ட காவல்துறையினரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.