டெங்கு காய்ச்சல்:அரசு மருத்துவமனையில்நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை
கோவை, ஜூன் 9-டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவி வரும் டெங்கு காய்ச்சல், கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட 9 பேர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் தனிவார்டில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோய் பரவாமல் தடுக்க அவர்களுக்கு தனித்தனியாக கொசு வலையும் வழங்கப்பட்டது. இதேபோல், நோயைக் கட்டுப்படுத்த சுகாதார அமைப்புகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத குழந்தையொன்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.இந்நிலையில், கோவை பூசாரிபாளையத்தைச் சேர்ந்த ஜீவஸ்ரீ (10), மாதம்பட்டியைச் சேர்ந்த மனோபா (9), திருப்பூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த சந்தியா (5), காரமடையைச் சேர்ந்த மீனாம்பிகை (6) உள்ளிட்ட 5 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு, டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் தனி வார்டில் சேர்க்கப்பட்டனர். இதுவரை 14 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காம்பேக்டிங் கட்டணம் 40 சதவிகிதம் உயர்வுஒத்துழைக்க சங்க நிர்வாகிகள் கோரிக்கை
திருப்பூர், ஜூன் 9-திருப்பூரில் பின்னலாடை தொழிலில் காம்பேக்டிங் கட்டணத்தை 40 சதவிகிதத்தை உயர்த்துவதாக நிட் காம்பேக்டிங் சங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக நிட் காம்பேக்டிங் சங்கச் செயலாளர் வி.ஈஸ்வரமூர்த்தி ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: மின் தடை, மின் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சமாளிப்பதற்கு இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு என்பது ஒரு பனியன் தயாரிப்புக்கு 60 பைசா முதல் 75 பைசா மட்டுமே உயரும். மத்திய அரசின் பல்வேறு சலுகைகளுடன் ஒப்பிடும்போது இக்கட்டண உயர்வை ஏற்றுமதியாளர்கள் ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.மேலும் நிட் காம்பேக்டிங் உறுப்பினர்களுக்கு பின்னலாடை உற்பத்தியாளர்கள் தர வேண்டிய பழைய நிலுவைத் தொகைகளில் 60 சதவிகிதத்தை உடனடியாகவும், மீதித்தொகையை ஒரு மாத கால அவகாசத்தில் பின் தேதியிட்ட காசோலையாகவும் வழங்கி இத் தொழிலைப் பாதுகாக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.அதேசமயம் நீண்ட நாட்களாக நிலுவைத் தொகை தராமல் ஏமாற்றிவரும் சில உற்பத்தியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு இனிமேல் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என்றும் நிட் காம்பேக்டிங் சங்கம் கூறியுள்ளது.

பங்க் ஊழியர் மீது துப்பாக்கி சூடுகொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை
கோவை, ஜூன் 9-கோவை துடியலூரை அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெட்ரோல் பங்க் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கோவை துடியலூரை அடுத்த மத்தம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் எழுத்தராக பணியாற்றி வருபவர் பழனிச்சாமி (58). இவர் வெள்ளியன்று பெட்ரோல் பங்கில் வசூலான பணம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்தை, வங்கியில் செலுத்துவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் காரமடை சென்று கொண்டிருந்தார். தண்ணீர் பந்தல் அருகே வந்த போது, பின்னால் வந்த கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பழனிச்சாமியின் முகத்தில் காரில் வந்த நான்கு பேர் மிளகாய்ப் பொடியைத் தூவி பணப்பையை பறிக்க முயன்றனர். ஆனால், சுதாகரித்துக் கொண்ட பழனிச்சாமி, கண் எரிச்சலை தாங்கிக் கொண்டு பணப்பையை கெட்டியாகப் பிடித்துள்ளார். கொள்ளையர்கள் பலமுறை முயற்சித்தும் அவரிடமிருந்து பணத்தைப் பெறமுடியவில்லை. இதற்குள், அப்பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், துப்பாக்கியால், பழனிச்சாமியின் தொடையில் சுட்டு விட்டு காரில் ஏறி தப்பியோடினர்.இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த எஸ்.பி. உமா, சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தார். பின்னர், கொள்ளையர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினர் கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த இரண்டு தனிப்படையும், சனியன்று கேரளா மற்றும் பெங்களூருக்கு தனித்தனியே சென்று கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: