வெள்ளிப்பனிமலைகள், பசுமை போர்த்திய குன்றுகள், பள்ளத்தாக்குகளும் நிறைந்து நீண்டு நெடிதுயர்ந்து படர்ந்து விரிந்திருக்கும் இமயத்தின் மடியில் தவழும் அழகு நகரம் சிம்லா. அந்நகர் இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரும் கூட. அங்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் சிம்லா மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர்களையே ஒரு சேர மேயரும், துணை மேயருமாக தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அதுவும் இந்திய தேசத்தின் ஆளும் கட்சியான காங்கிரசையும், தேசத்தின் பிரதான எதிர்க்கட்சியாகவும் இமாச்சலின் ஆளும் கட்சியாகவும் உள்ள பாஜகவையும் ஒரு சேர நிராகரித்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு மகுடம் சூட்டியிருக்கின்றனர். அதனால்தான் சிம்லா தேர்தல் முடிவு நாட்டின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறது. இந்த வெற்றியின் பின்னணி குறித்து கோவையில் நடைபெற்ற சிஐடியு அகில இந்திய பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த சிபிஎம் இமாச்சலப் பிரதேச மாநில செயற்குழு உறுப்பினரும், சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளருமான காஷ்மீர் சிங்தாகூரை சந்தித்தோம்.மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்குமான உறவு எப்படி இருக்கிறது? சுருக்கமாக சொல்வதென்றால், மக்களோடு மார்க்சிஸ்ட் கட்சி ஒரு சேரக் கலந்திருக்கிறது.
அதாவது ‘ அடிப்படை வசதிகள் மேம்பாடு, ஆப்பிளுக்கு ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும். போக்குவரத்து வசதிகளை பெருக்க வேண்டும். சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் குறிப்பாக ஹோட்டல் தொழிலாளர், சுற்றுலா கைடுகள், அங்கன்வாடி, மதிய உணவுத் திட்டப் பணியாளர்கள், சாலையோர சிறுகடை வியாபாரிகளின் கோரிக்கைகள் என பல்வேறு தரப்பினரின் வாழ்வாதார, ஜீவாதாரக் கோரிக்கைகளோடு நாங்கள் இரண்டறக் கலந்து நிற்கிறோம். அதனால் மக்களின் நம்பிக்கையாக பெற்றிருக்கிறோம்.‘சின்னச் சின்ன தவறுகளுக்குக் கூட ஹோட்டல் பணியாளர்களை நிர்வாகத்தினர் கடுமையாகத் தண்டிப்பார்கள். பல நிறுவனங்கள் சட்டச் சலுகைகள் எதையும் வழங்குவதில்லை. வேலைப் பாதுகாப்பற்ற அந்த ஹோட்டல் தொழிலாளர்களை சிஐடியு அணி திரட்டி இருக்கிறது. அவர்களது பிரச்சனைகளில் அனுதினமும் அமைப்புதலையிட வேண்டி இருக்கிறது. அதனால் அவர்களின் குடும்பத்தில் ஒரு அங்கமாக சிஐடியுவை எங்கள் மக்கள் பார்க்கின்றனர். சிம்லா நகரில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணிப் படை வரிசையாக ஹோட்டல் தொழிலாளர்களே உள்ளனர். சாதி, மதம், பணபலம், ஆட்சியதிகாரம் ஆகியவற்றை தாண்டி சிபிஎம் மக்களோடு ஐக்கியமானது எப்படி?ஆள்வது பாஜக. ஆகவே அதன் ஆணி வேர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மதவெறி பிடிப்புக்கள் அதிகமாகவே உண்டு.
ஏன் நடந்து முடிந்த தேர்தலில் கூட மதவெறியை கிளப்ப முயற்சித்தனர். ஓட்டுக்குப் பணம் மட்டுமல்ல ஒயினும் ஆறாக ஓடியது. அரசியல் அதிகார துஷ்பிரயோகம் நடந்தது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் நடத்திய தொடர்ச்சியான, விடாப்பிடியான உறுமிக்க பல போராட்டங்கள், எங்கள் கட்டுப்பாடுமிக்க, போர்க்குணமுள்ள தோழர்களின் அர்ப்பணிப்பும், தியாகமும், உழைப்பும் மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையாக மாறியிருக்கிறது என்றே கருதுகிறோம். மக்களின் அன்றாடப் பிரச்சனைகளில் எங்களின் தலையீடு, மாநில அளவில் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்று சக்தியாக மார்க்சிஸ்ட் கட்சியை முன்நிறுத்தியிருக்கிறது.மக்கள் தெருவில் இறங்கி போராட முன்வருகிறார்களா? கொஞ்சநாள் முன்னர் சிம்லா மாநகராட்சி நிர்வாகம் திடீரென நகரின் அழகைப் பராமரிக்க, தூய்மையைப் பராமரிக்க சுற்றுலா பயணிகளை ஈர்க்கச் சாலையோரக் கடைகளை, தெருவோர வியாபாரிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றது. நாங்கள் உழைக்கும் மக்கள் தான் நகரின் அழகு என்று நம்பினோம். ஆயிரக்கணக்கானோர் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை இழக்க அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்தோம். அதுவும் தெருவோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது என்று தேசிய அளவில் கொள்கை முடிவு இருக்கிறது. பல நீதிமன்ற தீர்ப்புகளும் இருக்கின்றன. எனவே அப்புறப்படுத்தக் கூடாது என்றோம். அதையும் மீறி போலீசார் மூலம் அகற்ற முயன்ற போது, அவர்களை களத்தில் தீரமுடன் எதிர்கொண்டோம். மாணவர்கள், வாலிபர்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் களமிறக்கி தடுத்து நிறுத்தினோம். அதேபோல் நகரம் வளர்ச்சி பெற்றுவிட்டது என்று கூறி ஜேஎன்என் யூஆர்எம் திட்டத்தின் கீழ் சொகுசு பேருந்துகளை இறக்கியது அரசு. அதுவரை ரூ.2, ரூ.3 கட்டணத்தில் சென்ற மக்கள் ரூ.8, ரூ.10, ரூ.15 வரை கட்டணமாக கொடுக்க வேண்டியது வந்தது.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி அனைத்து பொதுநல அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் மற்றும் மக்கள் ஆதரவுடன் ‘ சொகுசு பேருந்துகளை புறக்கணிப்போம்’ என்று அறைகூவல் விடுத்தோம். அதன்படி ஒருவாரக் காலம் பயணிகள் எவரும் அப்பேருந்துகளில் ஏறி பயணிக்கவில்லை. அதிர்ச்சியுற்ற அரசு, பின்னர் சாதாரண கட்டணம் வசூலிக்க முன்வந்தது. சமீபத்தில் நடைபெற்ற இந்த இரண்டு போராட்டங்களின் வெற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் மீதான நம்பிக்கையை மக்களிடம் உறுதிப்படுத்தியது. அமைப்பிற்கு நன் மதிப்பையும் பெற்றுத்தந்தது.அனைத்துத் தரப்பின ரும் எப்படி சிபிஎம் பின் னால் அணிவகுத்தனர்?ஒரு முறை நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. உடனே நகரின் மத்தியில் உள்ள பழைய பேருந்து நிலையத்தை புறக்கணித்து எல்லாப் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்றார்கள். இதனால் கிராமப்புறங்களிலிருந்து நகருக்கு வருவோருக்கு நான்கு மடங்கு அதிக செலவு, கடை வியாபாரிகளின் வர்த்தகம் பாதிப்பு, ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் திண்டாட்டம், சுமைப்பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால் பாஜக இதனை வளர்ச்சி என வர்ணித்தது. ஆனால் நாங்கள் அதற்கு உடன்படவில்லை. வளர்ச்சி என்பது மக்கள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும். எனவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்து போராட்டத்திற்கு தயாரானோம். சிம்லா வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததுதானா?நிச்சயமாக, ஏனென்றால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் கல்வி முழுக்க முழுக்க வியாபாரமாக மாறியது.
20 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், பி.எட், நர்சிங், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் என தனியார்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பாக ஆர்எஸ்எஸ், பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் அந்த கட்சி நிர்வாகிகள் நேரடியாகவும், பினாமி பெயரிலும் திறந்தனர். கல்விக் கட்டணங்கள் எகிறின. முதல்வர் மகனே ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகம் துவங்கினார். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும் இதில் கைகோர்த்தது. மார்க்சிஸ்ட் கட்சிதான் இப்போதும் எதிர்த்துப் போராடுகிறது. கட்சி அணியினரை எப்படி அரசியல் ரீதியாக ஸ்தாபனப்படுத்துகிறீர் கள்?குறிப்பாக இமாச்சலப்பிரதேசத்தில் இந்திய மாணவர் சங்கம் மிக வலுவாக இருக்கிறது. மாணவர் சங்கத்தில் அரசியல் பயிற்சி முகாம்களை தொடர்ந்து நடத்தி, ஊழியர்களின் தலைமைப் பண்பை வலுப்படுத்துகிறோம். பள்ளியில் துவங்கி மாநில அளவில் எழும் பிரச்சனைகள் வரை அனைத்திலும் கவனம் செலுத்தி தலையிடுகிறோம். போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இதன் மூலம் படிப்படியாக ஒவ்வொரு அரங்கத்தையும் அரசியல் படுத்தி பலப்படுத்தி வருகிறோம். அதுவே எங்களது களப்போராட்டத்தை ஒருங்கினைத்து வெற்றி பெறச் செய்ய உதவியாக இருந்தது. மேயர் சஞ்சய்சவுகானும், துணைமேயர் திக்கந்தார் பன்வரும் மாணவர் சங்க தலைவராக இருந்து, கட்சியின் தலைவர்களாக உயர்ந்த முன்வரிசை போராளிகள். இப்போதும் இமாச்சலப்பிரதேச பல்கலைக் கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினரே பேர வைத் தலைவர். பெரும் பாலான கல்லூரிகளில் மாண வர் இயக்கம் வலுவாக உள் ளது.
நேர்காணல்எம்.சக்தி, அ.ர.பாபு

Leave A Reply

%d bloggers like this: