தி.கோடு, ஜூன் 9-திருச்செங்கோடு அருந்ததிய மக்கள் பயன்படுத்தி வந்த மயானப்பாதையை சாதிய ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் இறந்த மூதாட்டியை சுடுகாட்டுக்கு கொண்டு சென்ற அருந்ததியர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி கைது செய்தனர். பின்னர் ஆம்புலன்சில் வைத்து மூதாட்டியை எடுத்துச் சென்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்குட்டது முஞ்சனூர். இங்குள்ள அருந்ததியர் தெருவில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டுப்பாதையை அருகிலுள்ளபூபதி என்பவர் தனக்கு சொந்தமானது என உரிமைகொண்டாட ஆரம்பித்தார். இதனால் அருந்ததியர்களுக்கும் பூபதிக்கு பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து 1999ம் ஆண்டு இப்பிரச்சனை குறித்து நீதிமன்றத்தில் பூபதி வழக்கு தொடர்ந்தார். இதற்கு அருந்ததியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் 2003ம் ஆண்டு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த இன்றைய தமிழக சட்டப் பேரவையின் துணை சபாநாயகரான தனபால் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும், வருவாய் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். இதில் தலித் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையில் 8அடி அகலமுள்ள பாதை விடுவது என்றும், அதற்காக ரூ.2லட்சம் பணம் கொடுப்பது எனவும் ஒப்பந்தம் ஏற்பட்டது. மேலும், நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்பப் பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் தொடர்ந்து அருந்ததியர்கள் மயானப்பாதையை பயன்படுத்து வந்தனர். ஆனால் பூபதி ஒப்பந்தப்படி நீதிமன்ற வழக்கை வாபஸ் பெறாமல் நீதிமன்றத்தில் குறுக்கு வழியில் தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றிருக்கிறார். தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பாதையை மறித்து கம்பி வேலி போட்டுள்ளார். இந்நிலையில் அருந்ததியர் பகுதியை சேர்ந்த பெருமாயி என்ற 75 வயது மூதாட்டி வெள்ளிக்கிழமை காலை இறந்து விட்டார். இறந்தவரை மாயனத்திற்கு எடுத்துச் செல்லும் பாதை அடைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் வேறு வழியின்றி அதே பாதையில் இந்த மூதாட்டியை சுடுகாட்டிற்கு எடுத்து செல்வது என அருந்ததியர்கள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதனையறிந்த சாதிய ஆதிக்க சக்தியினர் வேலி அமைத்திருக்கும் வழியே வரக்கூடாது. 2 கி மீட்டர் சுற்றியே பிணத்தை கொண்டு செல்ல வேண்டும் என கூறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காவல்துறையில் சாதிய ஆதிக்க சக்தியினர் தாங்கள் வாங்கிய நீதிமன்ற தீர்ப்பை காட்டி அருந்ததியர்கள் சுடுகாட்டு பாதையை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர், வருவாய் துறை அதிகாரிகள் கூடுதல் போலீஸ் படையுடன் அப்பகுதியில் முகாமிட்டனர். நேரம் செல்ல செல்ல அப்பகுதியில் பரபரப்பு அதிகமானது.இந்நிலையில் பிணத்தை ஏற்கனவே பயன்படுத்தி வந்த பாதையில் அருந்ததியர்கள் கொண்டு செல்ல முயன்றனர்.
அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு, அருந்ததியர் மக்கள் மீது தடியடி நடத்தினர். கொண்டு செல்லப்பட்ட பிரேதத்தை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி 2 கிமீட்டர் சுற்றி சென்று சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். தடியடிக்கு உள்ளான அருந்ததிய மக்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: