பொள்ளாச்சி, ஜுன் 8-கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்து, வால்பாறை பகுதியிலுள்ள ஒருவீட்டின் சமையலறையில் நுழைந்த சிறுத்தைப்புலி, அங்கிருந்த தூணின் இடுக்கில் சிக்கியது. பின்னர் அதிலிருந்து வெளியேற முடியாமல் தவித்த சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது.வால்பாறை சிறுவர் பூங்கா அருகே வசித்து வருபவர் பெரியக்கா. தோட்டத் தொழிலாளியான இவரது வீட்டின் பின்புறம் சமையலறை தனியாக உள்ளது. வெள்ளியன்று காலை வழக்கம்போல வீட்டைப் பூட்டிவிட்டுபெரியக்கா வேலைக்கு சென்றுவிட்டார்.இந்நிலையில்,அவரது வீட்டின் அருகே வசிப்பவர்கள், எதேச்சையாக பெரியக்கா வீட்டின் பின்புறம் சென்ற போது சிறுத்தைப்புலியைக் கண்டுள்ளனர். இதனால் பயந்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.இதனையடுத்து மானாம்பள்ளி வனச்சரகர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர்.
அப்போது, சிறுத்தையின் அருகில் சென்றபோது, சிறுத்தைப்புலி எவ்வித அசைவுமின்றி இருந்தது, இதனால் மிக அருகில் சென்று பார்த்தபோது சிறுத்தைப்புலியின் உடல், அங்குள்ள தூணின் இடுக்கில் சிக்கியிருப்பதும், வெளியேற முடியாமல் இறந்திருப்பதும் தெரியவந்தது. இறந்துபோன சிறுத்தைப்புலி சுமார் ஒன்றரை வயதுள்ள பெண்சிறுத்தையாகும். இதன் உடலில் செந்நாய்க் கூட்டம் தாக்கியதற்கான தடயங்களும் காயங்களும் இருந்துள்ளது. கடந்த இரு தினங்களாக இரை எதுவும் உட்கொள்ளாத நிலையில் மிகவும் பலவீனமாகக் காணப்பட்ட சிறுத்தைப்புலி, இரைதேடி குடியிருப்புப் பகுதிக்குள் வந்தபோது, பெரியக்கா வீட்டின் சமையலறை தூண் இடுக்கில் சிக்கியதால் அதிலிருந்து வெளியேற முடியாமல் உயிரிழந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. எனினும் பிரேதப்பரிசோதனைக்குப் பிறகே முழு உண்மையும் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். குடியிருப்புப் பகுதிக்கு வந்த சிறுத்தைப்புலி, உயிரிழந்த செய்தியறிந்து ஏராளமான பொதுமக்கள் சிறுத்தைப் புலியின் உடலைப் பார்க்க சம்பவ இடத்தில் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply