கோவை, ஜூன். 8-கோவையில் பத்திரிக்கையாளர்களை காவல்துறையினர் அவமரியாதையாக நடத்தியதற்கு கோவை பிரஸ் கிளப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கோவை பிரஸ் கிளப் தலைவர் கமலக்கண்ணன், பொதுச்செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பின் அவசர செயற்குழு கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் வருமாறு :கோவை மாவட்டத்தில் பொது இடங்களில் செய்தி சேகரிக்கச் செல்லும்ஊடகத்துறையினரிடம் காவல்துறையினர் தொடர்ந்து அத்துமீறி நடந்து கொள்வது வழக்கமாகி வருகிறது. வியாழனன்று காலை லீமெரிடியன் ஓட்டல் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத்துறையினரிடம் போலீசார் தரக்குறைவாக பேசியதோடு, பணி செய்யவிடாமலும் தடுத்துள்ளனர்.
குறிப்பாக பெண் போலீஸ்லட்சுமி, டிஎஸ்பி முருகசாமி ஆகியோர் ஊடகத்துறையினரிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதற்கு கடும் கண்டனத்தை பிரஸ் கிளப் தெரிவித்துக்கொள்கிறது. இவர்கள் மீது மேற்கு மண்டல ஐஜி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறோம்.பல்வேறு அமைப்புகள் பொது இடங்களில் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற சம்பவங்களின் போது போலீஸ் போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் சீருடை அணியாமல் பத்திரிகையாளர்கள் போர்வையில் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பது நடந்து வருகிறது. இது பத்திரிகையாளர்களின் பத்திரிகை சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் செயலாகும். எனவே பொது இடங்களில் பணியில் உள்ள போலீஸ் போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் சீருடை மற்றும் அடையாள அட்டை அணியவேண்டும் என்றும் பிரஸ்கிளப் வலியுறுத்துகிறது.

Leave A Reply