சேலம், ஜூன் 8-சேலம் டவுன் 25-வது கோட்டம் பள்ளப்பட்டி கோரிக்காடு பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான அருந்ததியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 4 தலைமுறையாக பயன்படுத்தி வந்த தென்புறத்தில் உள்ள வழித்தடத்தை பள்ளப்பட்டியை சேர்ந்த தவிட்டு வியாபாரி புஷ்பன் என்பவர் விலைக்கு வாங்கி விட்டதாகவும், உங்களுக்கு இங்கு வழித்தடம் இல்லை என்று கூறி குழி வெட்டி விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள்,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகரச் செயலாளர் பிரவீண்குமார், சேது மாதவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மனுக்களுடன் ஆட்சியரிடம் முறையிட வந்தனர். இவர்களை உள்ளே விட காவல்துறையினர் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த அவர்கள் ஆட்சியர் இங்கு வர வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ஆட்சியர் இல்லாததால் மாவட்ட வருவாய் அதிகாரி விரைந்து வந்து மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.