சென்னை, ஜூன் 8-தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கேட்ட வருக்கு காலதாமதமாக தகவல் வழங்கிய வங்கி மூத்த மேலாளருக்கு மத்திய தகவல் ஆணையம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த வர் ரஞ்சி ஆனந்தன். இவர், சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள ஒரு வங்கியில் சில தகவல்களை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2011 செப்டம்பர் 19 ந் தேதி விண்ணப்பம் செய்தார். ஆனால் எந்த பதிலும் வங்கியில் இருந்து வரவில்லை. இதையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, வங்கியின் செயல் இயக்குநரிடம் அப்பீல் செய்தார். ஆனால், அவரும் தகவல் வழங்கும்படி, பொது தகவல் அதிகாரிக்கு உத்தரவிடவில்லை.இதைதொடர்ந்து வங்கியின் எத்திராஜ் சாலை கிளையின் மூத்த மேலாளர் மற்றும் பொது தகவல் அதிகாரியான எஸ். பாலசுப்ரமணியத்துக்கு எதிராக மத்திய தகவல் ஆணையத் தில் ரஞ்சி ஆனந்தன் புகார் செய்தார். இவரது புகார் மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் ரஞ்சி ஆனந்தன், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் 2011 செப்டம்பர் 19 ந் தேதி விண்ணப்பம் செய்துள்ளார். அவருக்கு 2011 அக்டோபர் 19 ந் தேதி தகவல் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 2012 மே 18 ந் தேதிதான் தகவல் வழங்கப் பட்டுள்ளது. எனவே பொது தகவல் அதிகாரி பாலசுப்பிர மணியம், தகவலை 100 நாட்களுக்கு மேல் காலதாமதமாக வழங்கியுள்ளார். தகவல் பெறும் உரிமை சட்டம் பிரிவு 20(1)ன்படி காலதாமதமாக தகவல் வழங்கியதற்காக வங்கி அதிகாரி பாலசுப்ரமணியத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை அவரது சம்பளத்தில் இருந்து வங்கி நிர்வாகம் பிடித்தம் செய்யவேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.