உஸ்பெகிஸ்தானில் நடந்த ஆசிய இளையோர் சதுரங்கப்போட்டிகளில் ஆடவர் பட்டத்தை தமிழக வீரர் என்.ஸ்ரீநாத்தும், மகளிர் பட்டத்தை கோவாவின் இவானா மரியா புர்டாடோவும் வென்றுள்ளனர்.சர்வதேச மாஸ்டர் ஸ்ரீநாத், ஆசிய இளையோர் பட்டத்தை வென்றதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்குரிய முதல் தகுதியை அடைந்துள்ளார். இதற்கு முன்பு ஸ்ரீநாத் 12 வயதுக்குட்பட்டோர் உலகப்பட்டத்தை வென்றுள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 93 விழுக்காடுகளைப் பெற்றுள்ள ஸ்ரீநாத் சதுரங்கம் ஆடுவதற்கு இடையூறில்லாத வணிகவியல் பட்டப்படிப்பை தொடங்கவுள்ளார்.18 வயதுக்குட்பட்டோருக்கான உலக சதுரங்க சாம்பியன் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். அதற்கு முன்பாக ஆசிய இளையோர் சதுரங்கப்பட்டத்தை வெல்ல பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். கிராண்ட் மாஸ்டர் அபிஜித் குண்டேயிடம் பயிற்சி பெற்றுவரும் ஸ்ரீநாத், குண்டே வசிக்கும் புனேயில் பட்டப்படிப்பை மேற்கொள்ளவுள்ளார்.இரண்டு தங்கப்பதக்கங்கள் மட்டுமல்லாது, ஒரு வெண்கலமும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. உலக மகளிர் மாஸ்டர் ருச்சா பூஜாரி (மகாராஷ்டிரா) ஆசிய இளையோர் போட்டிகளில் வெண்கலம் வென்றுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.